வீட்டுக் காவலா!, வாங்க நாமும் திருடலாம்!

இராகவன் கருப்பையா – குறிப்பிட்ட சில கைதிகளை வீட்டுக் காவலில் வைப்பதற்கான புதிய சட்டம் ஒன்று வரையப்படும் என பிரதமர் அன்வார் செய்த அறிவிப்பு பல்வேறு தரப்பினரின் கருத்துகளைத் தூண்டிவிட்டுள்ளது.

முதற்காரியம், கடந்த வாரத்தில் அவர் அறிவித்த அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஏன் இந்த விவகாரம் புகுத்தப்பட்டது என்பது எல்லாருக்குமே குழப்பம்தான்.

ஏனெனில் நாட்டின் வரவு செலவுத் திட்டத்திற்கும் புதிய சட்ட அமலாக்கத்திற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும்.

இருப்பினும் முன்னாள் பிரதமர் நஜிப்பின் விடுதலைக்காக இன்னமும் போராடிக் கொண்டிருக்கும் அம்னோவின் குறிப்பிட்ட ஒரு சாராரை மகிழ்ச்சிபடுத்தும் முயற்சிதான் இது என்று கருதப்படுகிறது.

தனக்கு வீட்டுக் காவல் வேண்டும் என, நாட்டின் சட்ட விதிகளில் இல்லாத ஒன்றுக்காக நஜிப் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதும் நாம் அறிந்ததே.

இப்படிப்பட்ட ஒரு சட்டம் வரவேற்கத்தக்கது என கிளேங் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கருத்துரைத்தார்.

ஏனெனில் நாட்டிலுள்ள 43 சிறைச்சாலைகளில ஏற்பட்டுள்ள இட நெருக்கடியை அவர் சுட்டிக்காட்டினர். சுமார் 71,000 கைதிகள் இருக்க வேண்டிய இடத்தில் தற்போது 74,000கும் மேற்பட்டோர் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலைமையில் வீட்டுகாவல் என்ற அமுலாக்கம் இன்னும் இந்த எண்ணிக்கையை உயர்த்த வாய்ப்புள்ளது.

ஒரு சில நாடுகளில் பெரும்பாலான சமயங்களில் அரசியல் குற்றம் புரியும் தலைவர்கள்தான் இது போன்ற வீட்டுக் காவலில் வைக்கப்படுகின்றனர். உதாரணத்திற்கு மியன்மாரில் விடுதலை போராட்டவாதி ஆங் சான் சூகியின் நிலையை குறிப்பிடலாம்.

தலைச் சிறந்த மற்றொரு விடுதலை போராட்டவாதியான தென்னாப்ரிக்காவின் நெல்சன் மண்டேலா கூட 27 ஆண்டுகளாக சிறையில்தான் அடைக்கப்பட்டிருந்தார் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

ஆனால் நம் நாட்டில் பல்வேறு தரப்பினர் பரிந்துரைப்பதைப் போல கண்ட கண்ட குற்றவாளிக்கெல்லாம் வீட்டுக் காவல் வழங்கப்பட்டால் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளுக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.

உதாரணத்திற்கு, சிறு திருட்டு, சாலை போக்குவரத்துக் குற்றம் மற்றும் போதைப் பொருள் பழக்கம் போன்ற குற்றங்களைப் புரிவோருக்கு வீட்டுக் காவல் என்பது சொகுசான விடுமுறையாகக் கூட அமையக் கூடும். அதன் பிறகு அவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லாமல் போனாலும் ஆச்சரியமில்லை.

சிறையில் போதைப் பொருள் கிடைக்காது. ஆனால் வீட்டில் அது கிடைக்காது என்பதை யாராலும் உறுதிப்படுத்த இயலாது.

சிறையில் சொகுசு வாழ்க்கை இல்லை. சிறு அறைகளில் நினைத்தாற் போலான வசதியில்லாமல் சாதாரண உணவு என்பதுதான் தண்டனை. அவர்கள் நல்லவர்களாகத் திருந்தி வெளியே வர வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

எனினும் உள்துறையமைச்சர் சைஃபுடின் குறிப்பிட்டதைப் போல சிறு குற்றங்களைப் புரியும் மாற்றுத் திரனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் கர்பிணிப் பெண்கள் போன்றோருக்கு வீட்டுக் காவல் பரிசீலிக்கப்படலாம்.

ஆனால் உலக மகாத் திருடன் என அனைத்துலக ரீதியில் முத்திரைக் குத்தப்பட்டு சிறை தண்டனை அனுபவிக்கும் முன்னாள் பிரதமர் நஜிப் போன்றோருக்கு வீட்டுக் காவல் என்பது கேலிக் கூத்தான ஒன்றாகிவிடும் என்பதில் ஐயமில்லை.

அது மட்டுமின்றி அவர் தொடர்பான மற்ற வழக்குகளும் இன்னமும் நீதிமன்றத்தில் உள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆக நம் நாட்டில் ஊழல் மலிந்து கிடப்பதால் வீட்டுக் காவல் திட்டம் எந்த அளவுக்கு ஆக்ககரமாக அமையும் என்பதை நாம் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதன் தாக்கம் பலவீனமாக இருந்தால், அதுவே ஒரு உந்துதலாகவும் மாற வாய்ப்புண்டு.