எனது 6 ரிங்கிட் கடனை அடைக்க 60 ஆண்டுகள் ஆனது – இராகவன் கருப்பையா

கடந்த 1963ஆம் ஆண்டில் எனது இரு சகோதரிகளும் இரு சகோதரர்களும் தலைநகர் பிரின்சஸ் ரோட்(இப்போது ஜாலான் (பிளட்சர்) தமிழ்ப்பள்ளியில் பயின்றனர்.

ஜாலான் துன் ரசாக்கில் அமைந்துள்ள தேசிய இருதயக் கழகக் கட்டிடத்தின் (IJN) எதிரே சாலைக்கு அப்பால் உள்ள அப்பள்ளியில் அந்த சமயத்தில் என் மூத்த சகோதரி பார்வதி அக்கா 5ஆம் வகுப்பிலும் இரண்டாவது சகோதரி பசுவதி அக்கா 3ஆம் வகுப்பிலும் பயின்றனர்.

அதற்கு அடுத்து என் இரண்டாவது அண்ணன் ராஜமோகன் 2ஆம் வகுப்பிலும் மூன்றாவது அண்ணன் பஞ்சாட்சரம் முதல் வகுப்பிலும் கல்வி பயின்றனர்.

நான் அப்போது இன்னும் பள்ளி செல்லவில்லை. பாலர் பள்ளிக்கான வயது எனும் போதிலும் குடும்ப வறுமையின் காரணமாக நாங்கள் யாருமே அப்படிப்பட்ட மழலயர் பள்ளியில் மழைக்குக் கூட ஒதுங்கியதில்லை.

எனக்குப் பிறகு 2 வயதில் ஒரு தம்பியும் கைக்குழந்தையாக ஒரு தங்கையும் இருந்த வேளையில் குடும்பத்தில் மூத்தப் பிள்ளையான என் அண்ணன் ராமச்சந்திரன் அப்போது 3ஆம் படிவத்தில் பயின்றார்.

எட்டு பிள்ளைகளில் ஐவரை பள்ளிக்கு அனுப்புவது அச்சமயத்தில் என் தந்தைக்கு ஒரு பெரும் சவால்தான் எனும் போதிலும் அச்சுமையை தனியொருவராக இருந்து சமாளித்துக் கொண்டார். என் தாய் ஒரு குடும்ப மாது.

எங்கள் வீடு பிரின்சஸ் ரோட் தமிழ்ப்பள்ளியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. பேருந்துக் கட்டணம் இரு வழி பயணத்திற்கு ஒவ்வொருவருக்கும் தலா 10 காசுதான்.

இருந்த போதிலும் நால்வருக்கும் மொத்தம் 40 காசு கொடுப்பதற்கு சில வேளைகளில் என் தந்தை சிரமப்பட்டார்.

பணத் தட்டுப்பாடு ஏற்படும் அது போன்ற சமயங்களில் என் சகோதரிகள் இருவரும் பேருந்தில் பயணம் செய்யும் வேளையில் சகோதரர்கள் இருவரும் பள்ளிக்கு நடந்தே செல்வார்கள்.

அத்தகைய நாள்களில் பள்ளி முடிந்தவுடன் அவர்கள் இருவரையும் என் தந்தை தமது சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வீடு திரும்புவார். எனினும் அவர் அலுவலகத்தில் இருந்து திரும்பும் வரையில் இவ்விருவரும் பள்ளியிலேயே காத்திருப்பார்கள்.

ஒரு சில சந்தர்ப்பங்களில் அப்பள்ளியின் வருடாந்திர போட்டி விளையாட்டுக்களின் போது என்னையும் அங்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இப்படியாகத்தான் அந்தப் பள்ளிக்கூடத்துடனான எங்கள் குடும்பத்தின் உறவு இருந்தது.

நான் 7 வயதை அடைந்தவுடன் என் தந்தை என்னை அந்தப் பள்ளிக்கு அனுப்பவில்லை. தூரம் காரமாக வீட்டின் அருகில் இருந்த ஒரு ஆங்கிலப் பள்ளியில் என்னையும் தம்பியையும் தங்கையையும் பதிவு செய்தார்.

ஆங்கிலப் பள்ளிக்குச் சென்ற போதிலும் ஏனோ தெரியவில்லை பல வேளைகளில் என் எண்ணமெல்லாம் பிரின்சஸ் ரோட் தமிழ்ப்பள்ளி மீதுதான் இருக்கும்.

‘நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக’ நாள்கள் கடந்துச் செல்ல, அவர்கள் நால்வரும் இடைநிலைப் பள்ளிகளுக்குச் சென்றவுடன் பிரின்சஸ் ரோட் தமிழ்ப்பள்ளியுடனான எங்கள் குடும்பத்தின் தொடர்பு ஒரு முடிவுக்கு வந்ததாகத்தான் அப்போது தோன்றியது.

ஆனால் அதில் துளியளவும் உண்மையில்லை. ஏனெனில் ‘விட்டக் குறை தொட்டக் குறை’ எனும் சொற்றொடருக்கு ஏற்ப, உணர்ந்தோ உணராமலோ அப்பள்ளியுடனான எங்களுடைய உறவு ஒரு தொடர்கதையாகவே இருந்து வந்துள்ளது.

அந்த பள்ளிக்கூடத்தில் நான் பயிலவில்லை எனும் போதிலும் அதன் ஆசிரியப் பெருந்தகைகளில் ஒருவரான ‘குழந்தன் வாத்தியார்’  வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நான் பயின்ற ஆங்கிலப் பள்ளிக்கு சில மாதங்களுக்கு POL (மாணவர்களின் தாய்மொழி) வகுப்பாசிரியராக வந்ததை நன்றியுணர்வோடு நான் நினைவுக் கூறத்தான் வேண்டும்.

சுடும் வெய்யிலாக இருந்தாலும் கடும் மழையாக இருந்தாலும் சைக்கிளில்தான் அவர் வருவார்.

அது மட்டுமின்றி பிரின்சஸ் ரோட் தமிழ்ப்பள்ளியில் பயின்ற என் சகோதர சகோதரிகளின் துணையுடன்தான் தமிழ் மொழி மீதான ஆற்றலை என்னால் ஓரளவு வளர்த்துக் கொள்ள முடிந்தது என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

எனவே பிற்காலத்தில் தமிழ் நாளிதழ்களில் நிருபராகவும் துணையாசிரியராகவும் பணியாற்றியது மட்டுமின்றி, தமிழ் ஊடகங்களுக்கு சமூக, அரசியல், அலசல், ஆய்வுக் கட்டுரைகளைப் படைப்பதற்கும் அன்னைத் தமிழில் புத்தகங்கள் எழுதுவதற்கும், அறிந்தோ அறியாமலோ பிரின்சஸ் ரோட் தமிழ் பள்ளி ஆற்றியுள்ள பங்கினை நான் மறக்கவில்லை.

இந்த உணர்வு என் இதயத்தின் ஒரு மூலையில் குடி கொண்டு அல்லும் பகலும் என்னை உறுத்திக் கொண்டே இருக்கும்.

அதனால்தான் கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி என்னுடைய பயண நூலை வெளியிட நான் முடிவு செய்த போது பிரின்சஸ் ரோட் தமிழ்ப்பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என என் மனதில் தோன்றியது.

நிகழ்ச்சி நடைபெறுவதற்கு சுமார் 2 வாரங்கள் இருக்கையில் அப்பள்ளிக்குச் சென்று அதன் தலைமையாசிரியர் சந்திரனைச் சந்தித்து என் எண்ணத்தை வெளிப்படுத்தியதோடு அவருக்கான அழைப்பையும் விடுத்தேன்.

அகமகிழ்ந்த அவர்,  நிகழ்ச்சி நடைபெறும் வேளை பள்ளி தவணை விடுமுறையாதலால் சொந்த ஊருக்குத் தாம் திரும்பவிருப்பதாவும் பிரதிநிதிகளை அனுப்ப ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார்.

அதன்படி அப்பள்ளியின் நூலகப் பொறுப்பாசிரியை மணிமேகலையும் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர் நந்த கோபாலனும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள்.

நிகழ்ச்சியின் மத்தியில் அவ்விருவரையும் மேடைக்கு அழைத்து பள்ளிக்கு நன்கொடையாக காசோலை ஒன்றை வழங்க ஏற்பாடு செய்த நான், அதற்கான சிறிய விளக்கத்தையும் அளித்தேன்.

காசோலையை எடுத்து வழங்க என் 2ஆவது சகோதரி பசுவதி அக்காவையும் 3ஆவது அண்ணன் பஞ்சாட்சரத்தையும் மட்டுமே என்னால் மேடைக்கு அழைக்க முடிந்தது. ஏனெனில் மூத்த சகோதரி பார்வதி அக்காவும் 2ஆவது அண்ணன் ராஜமோகனும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்தான் இயற்கை எய்தினார்கள்.

நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நிறைவாக நடைபெற்று முடிந்தவுடன் மண்டபத்தை விட்டு வெளியேறும் முன் என் சகோதரி பசுவதி அக்கா என்னிடம் ஒரு விஷயத்தைச் சொன்னார்.

“ஐயா, நீ செஞ்சக் காரியம் எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு. ஆனா இப்பதான் எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வருது. பிரின்சஸ் ரோட் தமிழ்ப்பள்ளிக்கும் நம்ம குடும்பத்துக்கும் ‘விட்டக் குறை தொட்டக் குறை’ ஒன்று இருந்தது.”

“இன்னைக்கி  நீ கொடுத்தப் பணம் உண்மையிலேயே நன்கொடை இல்லை. அப்பள்ளியில் 60 ஆண்டுகளுக்கு முன் நம்ம அப்பா பட்டக் கடனைத்தான் இன்னைக்கி நீ அடைத்தாய்” என்று அவர் சொன்ன போது ஒரு கணம் நான் உறைந்தே போனேன்.

“அந்த சமயத்தில் ஒவ்வொரு மாணவரும்  வருடாந்திர பள்ளிக் கட்டணமாக 7 வெள்ளி செலுத்த வேண்டும். நான்கு பேருக்கு மொத்தம் 28 வெள்ளி கட்ட வேண்டியிருந்ததால் அப்பா கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதனை செலுத்தினார்.”

“மொத்தம் 22 வெள்ளியை செலுத்தி முடித்த நிலையில் பாக்கித் தொகை 6 வெள்ளியைக் கட்ட இயலாமல் அப்பா ரொம்பத் தடுமாறினார். பல மாதங்கள் கடத்தும் அப்பாவினால் அந்த பாக்கித் தொகையை செலுத்த இயலவில்லை.”

“அப்பாவிடம் ஞாபகப்படுத்துமாறு ‘பிரான்சிஸ் வாத்தியார்’ என்னிடம் சொல்லும் ஒவ்வொரு முறையும் நானும் வீடு திரும்பியவுடன் அப்பாவிடம் அது பற்றிச் சொல்வேன்.”

“ஆனால் ஒவ்வொரு தடவையும், ‘கொஞ்சம் பொறுமா,’ என மிகவும் மனமுடைந்த நிலையில்தான் அப்பா என்னை சமாதானப்படுத்துவார்.”

“நம்ம குடும்பத்தோட வறுமையை அறிந்திருந்த ‘பிரான்சிஸ் வாத்தியார்’ பல மாதங்கள் கழித்து ஒரு நாள் என்னை அழைத்து, ‘பரவாயில்லை, அப்பாவிடம் சொல்லு, நாங்கள் இதனைப் பார்த்துக் கொள்கிறோம்’ என்று கூறினார்.”

“அந்த பாக்கித் தொகையைத்தான் வட்டியோடு சேர்த்து இன்னைக்கி நீ கொடுத்திருக்கிறாய். நம்ம அப்பா இறந்து ரொம்ப நாளாச்சி. ஆனா பார்வதி அக்காவும் மோகனும் இன்னைக்கி இங்க இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும், அவங்களும் பெருமைப்பட்டிருப்பாங்க,” என்று பசுவதி அக்கா சொல்லி முடித்த போது அவருடையக் கண்கள் குலமாயின.

வறுமையில் உழன்ற எங்கள் குடும்பத்திற்கு அத்தருணத்தில் பரிவு காட்டிய ‘பிரான்சிஸ் வாத்தியாரும்’ எக்காரணத்தைக் கொண்டும் பிள்ளைகளின் கல்வி தடைபடக் கூடாது என்று எண்ணிய அன்புத் தந்தையும்தான் என் மனக்கண் முன் அப்போது தோன்றினார்கள்.

 

குறிப்பு – படங்கள் இணையத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை – பதிவு செய்தவர்களுக்கு நன்றி.