இராகவன் கருப்பையா – பினேங் மாநிலத்தில் கடந்த 10 மாதங்களில் முறையானத் தூய்மையை கடைபிடிக்காத மொத்தம் 52 உணவகங்கள் மீது குற்றப்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.இவற்றுள் மக்கள் அதிகம் விரும்பிச் செல்லும் ‘நாசி கண்டார்’ மற்றும் ‘கோப்பித்தியாம்’ உணவகங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் உணவகங்களில் தூய்மைக்கேடு எனும் வரும்போது இந்த எண்ணிக்கை ‘பனிப்பாறையின் முனையைப் போல்தான்’ என்பது நாம் எல்லாருமே அறிந்த ஒன்றுதான். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
ஆக்ககரமான அமலாக்க நடவடிக்கைகள் இல்லாததால் இந்நிலை பினேங் மாநிலம் மட்டுமின்றி மலாக்கா மற்றும் இதர மாநிலங்களிலும் மிகப் பரவலாக உள்ளது வேதனையான விஷயம்.
உணவகங்களின் சமையலறைகளில் எலிக் கழிவுகள், கரப்பான் பூச்சிகள், அசுத்தமான ஊழியர்கள் மற்றும் அசுத்தமான வகையில் உணவு தயார் செய்யப்படுவது, போன்ற குற்றச்சாட்டுகள் இன்று நேற்று முளைத்த புதியப் பிரச்சனைகள் அல்ல.
கோழி மற்றும் மீன் போன்றவற்றை தரையில் போட்டு நறுக்குவது, இன்னும் சமைக்கப்படாத உணவுப் பொருள்கள் மட்டுமின்றி சமைக்கப்பட்ட உணவு வகைகள் மீதும் எலிகள் ஏறித்திரிவது, உணவுப் பொருள்கள் மீது ஊழியர்கள் ஏறி மிதிப்பது போன்ற அக்கிரமங்களை அம்பலப்படுத்தும் காணொளிகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுதான் வருகிறது.
ஒவ்வொரு முறையும் எதேச்சையாக பதிவு செய்யப்படும் பொது மக்களின் காணொளிகளுக்காக அமலாக்க அதிகாரிகள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் திரைமறைவில் சமையலறைகளில் நடக்கும் அட்டூழியங்களை வாடிக்கையாளர்கள் பார்க்க இயலாது. அமலாக்க அதிகாரிகள் மட்டுமே அங்கு ஊடுருவ முடியும்.
சுத்தம் செய்யப்படாத, அழுக்கு நிறைந்த குளிர்ச்சாதனப் பெட்டிகளை பயன்படுத்துவது மற்றும் ஈ மொய்க்கும் குப்பைத் தொட்டிகளுக்கு அருகில் உணவுப் பொருள்களை கிடத்தி வைத்திருப்பது போன்றக் குற்றங்களுக்கும் பஞ்சமில்லை.
இருந்த போதிலும் அரசாங்கத்தின் ஆக்ககரம் குன்றிய அமலாக்கம் மற்றும் அலட்சியப் போக்கினால் இப்பிரச்சனைகள் இன்னமும் ஒரு தொடர்கதையாகவே இருந்து வருகின்றன.
இத்தகையப் பிரச்சனைகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளும் சுகாதார அதிகாரிகள், சம்பந்தப்பட்ட அந்த உணவகங்கள் மீது குற்றப்பதிவுகளை தாக்கல் செய்து 2 வாரங்களுக்கு முட உத்தரவிடுகிறார்கள். அதோடு 1,000 ரிங்கிட் அல்லது 2,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படுகிறது.
எனினும் இது போன்றத் தண்டனைகள் அந்த உணவகங்களுக்கு வெறும் ‘கொசுக்கடி’ போல்தான். அதனாலோ என்னவோ இப்பிரச்சனைக்கு இன்னமும் நிரந்தரத் தீர்வைக் காண முடியவில்லை.
இரண்டு வாரங்கள் கழித்து அந்த உணவகங்கள் மீண்டும் திறக்கப்பட்டவுடன் ‘பழைய குருடி கதவைத் திறடி’ கதைதான். இதனால் சுகாதார ரீதியில் பாதிக்கப்படுவது அப்பாவி வாடிக்கையாளர்கள்தான்.
அவ்வாறு 2 வாரங்களுக்கு தற்காலிகமாக மூடப்படும் உணவகங்களின் பெயர்களையும் முகவரிகளையும் அமலாக்க அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அம்பலப்படுத்த வேண்டும். அவற்றை மூடி மறைக்க வேண்டிய அவசியமில்லை.
இதனால் குறிப்பிட்ட ஒரு காலக்கட்டத்திற்கு வியாபாரம் பாதிக்கப்படும் என்பது உண்மைதான். ஆனால் அவற்றின் உரிமையாளர்களுக்கு இப்படிதான் பாடம் கற்பிக்க வேண்டும்.
அதன் பிறகு தூய்மைக்கு அவர்கள் அதிமுக்கியத்துவம் கொடுப்பார்களேயானால் கூடிய விரைவில் அவர்களுடைய வியாபாரம் செழிக்க வாய்ப்பிருக்கிறது.
அரசாங்கம் பொது மக்களின் நலன்களைத்தான் பாதுகாக்க வேண்டுமேத் தவிர உணவகங்களைக் காப்பாற்ற எண்ணக் கூடாது. அது அரசின் நோக்கமாகவும் இருக்கக் கூடாது.
நமது அண்டை நாடான சிங்கப்பூரில் பொது மக்களின் சுகாதாரத்திற்குதான் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. அந்நாட்டின் கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் அவர்களுக்கு தகுந்த பலனை அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அசுத்தமான உணவகங்களின் அடையாளத்தை மூடி மறைக்காமால் அவற்றின் பெயர்களை ஊடகங்களில் வெளியிடுவதனால்தான் அங்குள்ள உணவகங்களின் தரம் சர்வதேச நிலையில் உயர்ந்திருக்கிறது.