இராகவன் கருப்பையா –
ஒரு காலக்கட்டத்தில் மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் திரையரங்குகள் மிகப் பெரிய பங்காற்றியது தற்போது சன்னம் சன்னமாக நம் நினைவுகளில் இருந்து மறைந்து கொண்டிருக்கிறது.
கடந்த 1980களில் பிரவேசித்த தொழில்நுட்பப் புரட்சிதான் அத்தகைய பொழுதுபோக்கு மையங்கள் சுவடுத் தெரியாமல் காணாமல் போவதற்கு வித்திட்டது என்று தாராளமாகச் சொல்லாம்.
குறிப்பாக கடந்த 1970களிலும் அதற்கு முன்னைய காலக்கட்டத்திலும் தமிழ் நாட்டுத் திரையுலகை ஆக்கிரமித்திருந்த இரு துருவங்களான எம்.ஜி.ராமச்சந்திரனும் சிவாஜி கணேசனும் நம் சமூகத்தின் திரை ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததையும் நாம் குறிப்பிடத்தான் வேண்டும்.
நாடு தழுவிய நிலையில் நம் சமூகத்தினர் அதிகமாக வாழும் பகுதிகளுக்கு அருகில் உள்ள நகரங்களில் ஆங்காங்கே திரையரங்குகள் இருந்த போதிலும் தலைநகரில் உள்ள குறிப்பிட்ட சில திரையரங்குகள்தான் பிரசித்திப் பெற்றவையாக இருந்தன.
குறிப்பாக தலைநகரிலும் அதன் சுற்றுவட்டத்திலும் அமைந்திருந்த ‘ஓடியன்’, ‘ஃபெடரல்’, ‘கெப்பிட்டல்’, ‘பெவிலியன்’, ‘கெத்தே’, ‘மெஜஸ்டிக்’, ‘மெட்ராஸ்’, ‘கொலுஸியம்’, ‘செண்ட்ரல்’, ‘ஹிந்துஸ்தான்’, ‘ரெக்ஸ்’ மற்றும் பிரிக்ஃபீல்ஸில் உள்ள ‘லீடோ’ போன்ற திரையரங்குகளில் ஒவ்வொரு முறை தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்படும் போதும் அவ்வட்டாரமே கலைகட்டும்.
பெரும்பாலான சமயங்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்தப் படமும் நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பிலான படமும் போட்டாப் போட்டியாக ஒருசேர வெளியீடு காணும்.
சில படங்கள் 100 நாள்கள் மற்றும் வெள்ளி விழா வாரங்கள் எனத் தொடர்ந்து திரையிடப்பட்டுக் கொண்டாட்டங்களைக் காணும்.
ஒரு சில வேளைகளில், அதிக அளவிலான விளம்பரத்துடன், பெருமளவிலான எதிர்பார்ப்புகளுக்கிடையே திரையீடுக் காணும் படங்களைக் காண்பதற்கு நகர்ப்புறங்களுக்கு அப்பால் உள்ள எண்ணற்ற ரசிகர்கள் முதல் நாளே தலைநகரில் குவியத் தொடங்கிவிடுவார்கள்.
விசேஷ வாடகைப் பேருந்துகளில் தலைநகரை நோக்கி படையெடுக்கும் அவர்கள், தங்களுடன் கொண்டு வந்திருக்கும் பாய்களை திரையரங்குகளுக்கு வெளியே விரித்து அங்கேயே இரவைக் கழித்தக் காலங்களும் உண்டு.
இதற்கிடையே அத்தகைய ரசிகர்களின் சினிமா மோகத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சில குண்டர் கும்பல்கள் அதிக அளவிலான டிக்கெட்டுகளை முன்கூட்டியே கொள்முதல் செய்து, அப்பாவி ரசிகர்களிடம் பிறகு ‘கள்ளச் சந்தை’யில் பன்மடங்கு விலையை உயர்த்தி விற்பனை செய்வார்கள்.
இத்தகைய அடாவடித்தனம் பெரும்பாலான வேளைகளில் ‘செண்ட்ரல்’, ‘ஹிந்துஸ்தான்’, ‘கொலுஸியம்’, ‘ஃபெடரல்’ மற்றும் ‘கெத்தே’, ஆகிய திரையரங்களில் அதிகமாக நடக்கும்.
ஒரு சில சமயங்களில் காவல்துறையினர் கூட்டத்திற்குள் அதிரடியாகப் புகுந்து அந்த டிக்கெட்டுகளை அவர்களிடமிருந்துப் பிடுங்கி வின்னில் வீசும் காட்சிகளும் வேடிக்கையாக இருக்கும்.
குண்டர் கும்பல்களின் ஆதிக்கம், குறிப்பாக செண்ட்ரல், ஹிந்துஸ்தான் மற்றும் கொலுஸியம், ஆகியத் திரையரங்குளில் சற்று அதிகமாகவே இருந்தது.
சில வேளைகளில் வெட்டுக் குத்து போன்ற கொடூரங்களும் திரையரங்குகளுக்கு வெளியே நிகழ்ந்து ரசிகர்களிடையே பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தும்.
இந்தத் திரையரங்குகளில் மற்றொரு விசேஷம் என்னவென்றால், திரைப்படம் முடிந்து ரசிகர்கள் அரங்கைவிட்டு வெளியேறும் போது சம்பந்தப்பட்ட அந்தப் படத்தில் இடம் பெற்ற புகழ்பெற்றப் பாடல்களை, இசைத் தட்டுகளையும் ஒலி நாடாக்களை விற்பனை செய்யும் அங்குள்ளக் கடைகள், தங்களுடைய ஒலி பெருக்கிகளில் உச்சத்திற்கு உயர்த்தி ஒலியேற்றி விளம்பரம் செய்து விற்பனை செய்வார்கள்.
படத்தைக் கண்டுக் களித்த உற்சாகத்தோடு அரங்கை விட்டு வெளியேறும் ரசிகர்களில் அதிகமானோர் அவற்றை வாங்கிச் செல்வது வழக்கமான ஒன்றுதான்.
நாளடைவில் தொழில்நுட்பத்தின் துரித வளர்ச்சியில், ‘ரெக்கோர்ட்’ எனப்படும் கருநிறத்திலான அந்த இசைத்தட்டும் ‘கேசட்’ எனப்படும் ஒலிநாடாவும் புழக்கத்தில் இல்லாமல் போய்விட்டது.
அது மட்டுமின்றி ‘வீடியோ கேசட்’ எனப்படும் ஒளி, ஒலி நாடாவும் அதனை இயக்குவதற்கான ‘வீடியோ டெக்’ எனப்படும் கருவியும் திரையரங்குகளை நம் வீட்டிற்குள்ளேயே கொண்டு வந்ததைத் தொடர்ந்து வெளியே பிரமாண்டமாக இருந்த திரையரங்குகள் சன்னம் சன்னமாக மூடு விழாக் கண்டன.
சில ஆண்டுகள் கழித்து அந்தத் தொழில்நுட்பமும் மறைந்து, டி.வி.டி. மற்றும் சி.டி. எனப்படும் கையடக்கத் தட்டுகளில் திரைப்படங்கள் பதிவாகி நம் இல்லங்களில் நுழைந்தன.
இப்போது அதுவும் குறைந்து, நாம் ஒவ்வொருவரும் தலா ஒரு திரையரங்கை நம் ‘பொக்கெட்’டுகளில் செருகி, சுமந்துத் திரிவதைப் போல நமது கைபேசிகளிலேயே முழுத் திரைப் படத்தையும் பார்த்து ரசிப்பதற்கு ஏதுவான சொகுசை தொழில்நுட்பம் நமக்கு வழங்கியுள்ளது.
அதோடு, ‘எஸ்ட்ரோ’, ‘எமஸோன் ப்ரைம்’, ‘டிஸ்னி ஹொட்ஸ்தார்’ மற்றும் ‘நெட்ஃபிளிக்ஸ்’ போன்ற எண்ணற்றத் தொலைக்காட்சித் தளங்கள் ஆயிரக்கணக்கானத் திரைப்படங்களை காற்றின் வழியாகவே நம் வீட்டிற்குள் கொண்டு வருகின்றன.
எனினும் ‘மோல்’ எனப்படும் வணிக வளாகங்களில் தற்போது சிறு அளவிலான நவீனத் திரையரங்குகள் மறு பிரவேசம் கண்டு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தி வருகின்றன.
வேண்டிய டிக்கெட்டுகளுக்கு இயங்கலை வழியாக பதிவு செய்து கட்டணத்தையும் செலுத்திவிட்டு நேராகத் திரையரங்கிற்குச் செல்ல வேண்டியதுதான்.
கடந்த காலங்களைப் போல திரையரங்குகளுக்கு வெளியே வரிசையில் முண்டியடித்துக் கொண்டோ குண்டர் கும்பல்களின் கள்ளச் சந்தையில் அதிக விலை கொடுத்தோ டிக்கெட்டுகளை வாங்க வேண்டிய அவசியமில்லாதச் சூழலை தொழில்நுட்பம் நமக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.