இராகவன் கருப்பையா – இந்நாட்டில் பல சந்தர்ப்பங்களில் நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம் என்பதுதான் உண்மை. அத்தகையத் தருணங்களில் தான் நாம் எப்படி இந்த ஏளனமான நிலைக்கு வந்தோம் என்ற வினா நமது சுய மரியாதையை உரசி பதம் பார்க்கிறது.
பிற இனத்தவர் நம்மை தாழ்த்தி எடைபோடுவதற்கு குண்டர் கும்பல், வெட்டுக் குத்து, கொலை, ரவுடித்தனம் மற்றும் குடி போதை, போன்ற எதிர்றையான அம்சங்கள் காரணங்களாக இருந்து வருகின்றன.
இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு, தெரிந்தோ தெரியாமலோ, ‘ஆட்டுக் கறிக்கு அலையும் கூட்டம்,’ எனும் ஒரு அடையாளத்தையும் நாம் சுமந்துத் திரிகிறோம் என்பது ஒரு வேதனையான விஷயம்.
தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளும், கல்யாண விருந்து நிகழ்ச்சிகளின் போது திருமண வீட்டாரும் இந்த அடையாளத்தை நமக்குச் சூட்டுகின்றனர்.
ஆட்டுக் கறி விருந்து வைத்தால் நன்றி மறக்காமல் இந்தியர்கள் வாக்களிப்பார்கள் கணிப்பும் உள்ளது. நம் இனத்தைச் சார்ந்த கட்சிகள்தான், “8 ஆடுகள் வெட்டுகிறோம், 10 ஆடுகள் வெட்டுகிறோம்,” என பெருமையாக விளம்பரப்படுத்தி வாக்காளர்களை தேர்தல் விருந்துக்கு அழைக்கின்றன.
அப்படியென்றால் ஆட்டிறைச்சிக்காக ஜனநாயக உரிமையை அடகு வைக்கும் சமுதாயமா நம் இனம், எனும் கேள்வி எழுகிறது.
பொதுத் தேர்தல் காலங்களின் போதும் இடைத் தேர்தல் நடத்தப்படும் வேளைகளிலும், குறிப்பாக நகர்ப்புறங்களுக்கு வெளியே, அப்பட்டமாகவே இந்த அவலம் அரங்கேற்றப்படுவதை கடந்த காலங்களில் நாம் பார்த்திருக்கிறோம்.
நம் இனம் சார்ந்த கல்யாண விருந்துகளின் போதும் இதே நிலைதான். ஆட்டிறைச்சியை மட்டும் ‘ரேஷன்’ போல பரிமாறி, உணர்ந்தோ உணராமலோ விருந்தினரை கவனமாக கவணிப்பார்கள்.
உணவு நேரத்தின் போது விருந்தினர்கள் வரிசை பிடித்து ஒவ்வொரு உணவு வகையையும் தானாகவே பரிமாறிக் கொள்வார்கள். ஆனால் ஆட்டிறைச்சியை மட்டும் விருந்தினர்கள் தொட முடியாது.
அந்த இடத்தில் எதிரே ஒருவர் நின்று கொண்டு, சிறியதொரு கரண்டியினால் அந்த இறைச்சியை கொஞ்சம் கொஞ்சமாக பங்கீடு செய்வார். இச்செயல், விருந்தினர்களை அவமானப்படுத்துமா, அல்லது விருதினர் அதிகம் உண்டால் ஆரோக்கியமற்றது என்ற அக்கரையை காட்டுமா? அல்லது ஆட்டிறைசியின் விலையும், அரிதாககிடைப்பதால், அனைவருக்கும் வேண்டும் என்ற நிலையா?
ஆட்டிறைச்சி முடிந்துவிடுமே என்று பயந்து நடுங்கி மன உளைச்சலுக்கு ஆளாவதைவிட, திருமண வீட்டார் அந்த இறைச்சியை முற்றிலும் தவிர்த்துவிடலாமே! விருந்தினர்கள் கோபித்துக் கொள்ளவா போகிறார்கள்!
நம் இனம் சார்ந்த அரசியல் கட்சிகளை சார்ந்த சிலர் நம்மை ஏளனமாக நடத்துவதும், தரம் தாழ்த்தி எடை போடுவதும், நம்பிக்கை துரோகம் செய்வதும் மற்றும் பொய் வாக்குறுதிகளை அள்ளித் தெளிப்பதையும் நிறுத்த வேண்டும்.
வாக்கு வேட்டைக்காக, அரசியல் ஆதாயத்திற்காக அவர்கள் எதையும் செய்வார்கள். நமது தன்மானத்தை நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஆட்டிறைச்சிக்காக நமது உரிமையை ஒருபோதும் அவர்களிடம் அடமானம் வைத்துவிடக் கூடாது.
ஆனால் நம் சமூகத்தைச் சார்ந்த திருமண வீட்டார், இந்த ஆட்டிறைச்சி விவகாரத்தில் விருந்தினர்களை அழைப்பவர்கள் விருதோம்பலுக்கு இலக்கணமாக இருக்க வேண்டும். அளந்து போட்டு அவமானப்படுத்துவதை விட ஆட்டிறைச்சியை தவிர்ப்பது நல்லது.