பிரபாகரனின் தோல்வி – சுய குறைபாட ? அல்லது இன அரசியலா?

இராகவன் கருப்பையா – தலைநகர் பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான பிரபாகரன் தனது கட்சித் தேர்தலில் அடைந்த தோல்வியானது பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பி.கே.ஆர். கட்சியின் பிரிவுகளுக்கான செயற்குழு தேர்தலில் பத்து பிரிவின் தலைவர் பதவியை அஷிக் அலி எனும் இளம் வழக்கறிஞரிடம் பிரபாகரன் பறிகொடுத்தார்.

கடந்த 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் பத்து தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தியன் சுவாவை எளிதில் தோற்கடித்த பிரபாகரன் இம்முறை அஷிக்கிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்கொண்டார்.

கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலின் போது பத்து தொகுதியில் ஒரு சுயேட்சையாக நின்று  வெற்றி பெற்ற பிரபாகரன், 22 வயதில் மலேசியாவின் ஆக இளைய நாடாளுமன்ற உறுப்பினர் எனும் வரலாற்றை படைத்தார் என்பது நாம் அறிந்ததே.

பிறகு பி.கே.ஆர். கட்சியில் இணைந்த அவர், 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற 15ஆவது பொதுத் தேர்தலிலும் மகத்தான வெற்றியை பதிவு செய்து பத்து தொகுதியை தக்க வைத்துக் கொண்டார்.

எனினும் அந்த 2ஆவது வெற்றிக்குப் பிறகு, பத்து தொகுதியில் அவருடைய சேவைத்தரம் முன்பு இருந்ததைப் போல் இல்லை எனும் குறைபாடுகள் எழத் தொடங்கின.

பல்லாண்டுகளாக அவருடன் அணுக்கமாக இருந்து, அவருக்கு தீவிர ஆதரவாளர்களாக செயலாற்றி வந்த பல நெருங்கிய நட்புகளே அவரை விட்டு விலகும் அளவுக்கு அவருடைய போக்கில் மாற்றம் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அவருடைய அலுவலக பணியாளர்கள் கூட பொது மக்களின் தொலைபேசி அழைப்புகளை முறையாகக் கையாளாகாமல் அலட்சியப் போக்கை வெளிப்படுத்தினர் என்று சொல்லப்படுகிறது.

இத்தகைய சூழலில் கடந்த ஆண்டுத் தொடக்கத்தில் மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவான ‘மித்ரா’விற்கு தலைமை பொறுப்பை ஏற்றதிலிருந்து நிலைமை மேலும் மோசமானது என்றே சொல்ல வேண்டும்.

மிகவும் இளமையான வயதில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக பிரவேசம் செய்து துடிப்பாக செயல்பட்ட பிரபாகரனுக்கு அரசியலில் சிறப்பான எதிர்காலம் உள்ளது என தொடக்கத்திலிருந்தே பரவலாக கணிக்கப்பட்டது.

ஆனால் கட்சித் தேர்தலில் ஏற்பட்ட இந்தத் தோல்வியானது அவருக்கு பெரியதொரு சறுக்கலை ஏற்படுத்தி எண்ணற்ற வினாக்களுக்கு வித்திட்டுள்ளது என்றேத் தெரிகிறது.இந்தத் தோல்வியினால் ஏற்பட்டுள்ள பின்னடைவைத் தொடர்ந்து அவருடைய அரசியல் பயணம் இனி கரடு முரடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இப்போதிலிருந்து ஒவ்வொரு அடியையும் அவர் மிகவும் கவனமாகவும் கண்ணியமாகவும் எடுத்து வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஊடகங்களுடனும் அணுக்கமான உறவுகளைப் பேணுவதற்கான வழித்தடங்களை அவர் அமைத்துக் கொள்ள வேண்டும். இனிமேலும் அலட்சியமாக இருக்க முடியாது.

நாட்டின் அடுத்த பொதுத் தேர்தல் நடைபெற இன்னும் ஏறத்தாழ 2 ஆண்டுகள் மட்டுமே இருக்கும் வேளையில் பத்து தொகுதியில் மீண்டும் போட்டியிட அவருக்கு வாய்ப்புக் கிடைக்குமா என்பது பெரிய கேள்விக்குறியாகியுள்ளது.

மொத்தத்தில், பிரபாகரன் கிட்டதட்ட மீண்டும் அடிப்படை அரசியலிலிருந்து மேலெழும்ப வேண்டிய சூழலுக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளார் என்பதுதான் நிதர்சனம்.