‘தமிழர் புலப்பெயர்வு’- நூல் வெளியீட்டு விழா

இராகவன் கருப்பையா – உலகத் தமிழர்களின் புலப்பெயர்வு குறித்த விரிவான ஆய்வுகளை உள்ளடக்கிய நூல் ஒன்று எதிர்வரும் மே 17ஆம் தேதி சனிக்கிழமை வெளியீடு காணவிருக்கிறது.

தமிழ் மரபு அறக்கட்டளையின் தோற்றுநரும் அதன் தலைவருமான முனைவர் சுபாஷினி கனகசுந்தரம் எழுதியுள்ள இந்நூல் பிற்பகல் 3.30 மணிக்கு தலைநகர் வில்மா துன் சம்பந்தனில் உள்ள சோமா அரங்கில் வெளியிடப்படும்.

பினேங் மாநிலத்தில் பிறந்த சுபாஷினி, கணினி துறையில் தமது உயர் கல்வியைத் தொடர்வதற்கு சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனி சென்றார். தற்போது கணினி தொழில்நுட்ப வல்லுனராக அங்கு அவர் பணிபுரிகிறார்.

கடந்த 2,500 ஆண்டுகளாக புலம்பெயர்ந்த தமிழர்கள் உலகின் பல பகுதிகளுக்கு எதற்காகச் சென்றார்கள், எப்படிச் சென்றார்கள், அவர்களுடைய வாழ்க்கை எப்படி அமைந்திருக்கிறது, போன்ற விவரங்களை துல்லியமாக ஆய்வு செய்து இந்நூலில் அவர் உள்ளடக்கம் செய்துள்ளார்.

உலகம் முழுவதிலும் எண்ணற்ற நாடுகளுக்கு பயணித்த சுமாஷினி, அங்குள்ள 1,200கும் மேற்பட்ட அருங்காட்சியங்களில் தனியறைகளில் தாழிடப்பட்டுக் கிடக்கும் தமிழர் வாழ்வியல் மற்றும் வரலாறு தொடர்பான சான்றுகளை தேடி எடுத்துள்ளார்.

அந்த விவரங்ளை அடிப்படையகக் கொண்டு 150கும் மேற்பட்ட  கட்டுரைகளை எழுதியுள்ள அவர், உலகலாவிய நிலையில் உள்ள பல்வேறு கல்விக் கழகங்களில் 800கும் மேற்பட்ட உரைகளையும்  நிகழ்த்தியுள்ளார்.

இரண்டு மின்னூல்கள் உள்பட இதுவரையில் மொத்தம் 23 புத்தகங்களை எழுதியுள்ள சுபாஷினி, 10கும் மேற்பட்ட அனைத்துலக விருதுகளுக்கும் சொந்தக்காரராவார்.

தமிழகத்தில் ஓலைச்சுவடி பாதுகாத்தல், படியெடுத்தல் மற்றும் மின்னூலாக்குதல் என்று நின்றுவிடாமல் தமிழகக் கல்வெட்டுத் துறையிலும் தொல்லியல் துறையிலும் மிகச் சிறந்த வகையில் அவர் சேவையாற்றி வருவதும் பெருமைக்குரிய ஒன்று.

‘தமிழர் புலப்பெயர்வு’ எனும் இந்த அரிய நூலை வாங்கிப் படிக்கும் ஒவ்வொருவரும், சுபாஷினி இத்துறையில் செய்துள்ள விரிவான ஆய்வுப் பணிகளின் ஆழ, அகலங்களைப் புரிந்து கொள்ள முடியும் என்பது உறுதி.

 

~