இராகவன் கருப்பையா – வெளிநாட்டு பயங்கரவாதக் கும்பலுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் 36 வங்காள தேசப் பிரஜைகள் கைது செய்யப்பட்டதானது மலேசிய போலீஸ் படையைச் சேர்ந்த உளவுத் துறையின் அதீதத் திறமையை நிரூபித்துள்ளது.
உள்துறையமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் சில தினங்களுக்கு முன் மிகப் பெருமையாக செய்த இந்த அறிவிப்பு நமக்கெல்லாம் மகிழ்ச்சியளிக்கிறது என்பது உண்மைதான்.
பயங்கரவாதத்திற்கு எதிராக நமது காவல்துறை கொண்டுள்ள இத்தகைய உயர்நிலைத் திறமையை அவசியம் நாம் பாராட்டத்தான் வேண்டும்.
எனினும் கடந்த 16 ஆண்டுகளாக ஒட்டு மொத்த காவல்துறையினரின் ‘கண்களிலும் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கும்’ பத்மநாதன் எனும் ஒரு நபரை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் எல்லாருடையக் கேள்வியாக உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரையில் ஜொகூரிலும் சிலாங்கூரிலும் நமது காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைளின் போது அந்த வங்காள தேச சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டனர் என சைஃபுடின் கூறினார்.
அந்நபர்கள் அந்த சமயத்தில் ஐ.எஸ்.(IS) எனப்படும் அனைத்துலக இஸ்லாமிய பயங்கரவாதக் கும்பலுக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக நம்பப்படுகிறது.
இத்தகைய அதீதத்திறமையுடைய நமது போலீஸ் படையின் உளவுத்துறையினர், கைக்குழந்தை ஒன்றை தூக்கிக் கொண்டு தப்பியோடிய ஒரு நபரை தேடிப் பிடிக்க இயலாமல் இருப்பது நமக்கெல்லாம் அதிர்ச்சி கலந்த வியப்பாகவே உள்ளது.
சுமார் 16 ஆண்டுகளுக்கு முன் மதம் மாறி விவாகரத்தான பத்மநாதன் எனும் அந்நபர், முன்னாள் மனைவி இந்திரா காந்தியிடமிருந்த 11 மாத கைக்குழந்தையை அபகரித்துக் கொண்டு தலைமறைவானார்.
பத்மநாதன் கைது செய்யப்பட்டு, பிரசன்னா டிக்க்ஷா எனும் அந்தக் குழந்தை இந்திரா காந்தியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது நாமெல்லாம் அறிந்ததே.
எனினும் காவல்துறையினர் இன்று வரையிலும் அந்த நீதிமன்றத் தீர்ப்பை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்றே நமக்குத் தோன்றுகிறது.
ஐந்து பிரதமர்களின் ஆட்சியில் 8 புதிய காவல்துறைத் தலைவர்கள் பதவியேற்ற பிறகும் இந்திரா காந்திக்கு விமோசனம் கிடைக்கவில்லை என்பது உண்மையிலேயே வேதனையான ஒரு விஷயம்.
பத்மநாதன் தொடர்பாக இந்திரா காந்தியின் வழக்கறிஞர்கள் பல்வேறு ஆதாரங்களை சமர்ப்பித்துள்ள போதிலும் காவல்துறை தரப்பில் மெத்தனப் போக்குதான் தொடர்கிறது.
எனவே நமது போலீஸ் படையின் உளவுத் துறை உச்சக் கட்டத் திறனைக் கொண்டுள்ளது என பாராட்டும் சைஃபுடின், 16 ஆண்டுகளாகப் பிள்ளையை காணாது பரிதவிக்கும் இந்திரா காந்தியின் துயர் துடைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
இல்லையேல் நமது காவல்துறையின் திறமையும் அதற்கான அமைச்சரின் பாராட்டுகளும் அர்த்தம் பொதிந்த ஒன்றாக இருக்காது என்பது வேதனையான விஷயம்.