‘எஸ்ட்ரோ’ நிகழ்ச்சி படைக்க நடிகை கவுதமி தேவையா?

இராகவன் கருப்பையா –  ‘எஸ்ட்ரோ’ விண்மீன் தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஒளியேறவிருக்கும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருக்கும் தமிழகத் திரைப்பட நடிகை கவுதமிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

‘அச்சமில்லை அச்சமில்லை’ எனும் தலைப்பிலான இத்தொடர், ஒவ்வொரு வாரமும் சுமார் 30 பங்கேற்பாளர்களை உள்ளடக்கி நடத்தப்படவுள்ள ஒரு விவாத மேடையாகும்.

இந்நிகழ்ச்சி, தமிழகத்தின் ‘விஜய் டி.வி.’யில் கோபி தொகுத்து வழங்கும் ‘நீயா நானா’ தொடரைப் போல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இத்தகைய ஒரு நிகழ்ச்சி நிச்சயம் நம் சமூகத்திற்கு பயனான ஒன்றாக அமையும் என்பதில் ஐயமில்லை. இம்முயற்சி வரவேற்கத்தக்க ஒன்றுதான்.

எனினும் இதனை தொகுத்து வழங்குவதற்கு இலட்சக் கணக்கான ரிங்கிட் செலவு செய்து ஏன் தமிழகத்தில் இருந்து ஒருவரை இங்கு அழைத்து வர வேண்டும் என பல்வேறுத் தரப்பினர் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆங்கிலம் கலக்காத, அழகுத் தமிழ் பேசக் கூடிய, மிகுந்த ஆற்றலுடைய, உயர்கல்வி பெற்ற ஆயிரக் கணக்கான இளையோர் நம்மிடையே இருக்கும் போது, ‘எஸ்ட்ரோ’வின் தமிழ் பகுதி பொறுப்பாளர்கள் ஏன் ஒரு சினிமா நடிகையை  இங்கு அழைத்துவர வேண்டும் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அடுத்த 13 வாரங்களுக்கு தொடர்ச்சியாக ஒளியேற்றுவதற்கு தேவையான நிகழ்ச்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதன் முதல் நிகழ்ச்சி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி விண்மீன் தொலைக்காட்சியில் ஒளியேறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கவுதமியும் அவருடையக் குழுவினகும் மலேசியாவிற்கு வருவதற்கான விமான டிக்கெட், சொகுசு விடுதிகளில் இங்கு தங்குவதற்கான செலவுகள் மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான கட்டணங்கள் உள்பட அனைத்துதத் தேவைகளுக்கும் ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் ரிங்கிட் செலவிடப்பட்டதாக நம்பப்படுகிறது.

இந்நிகழ்ச்சிக்கு கவுதமியைவிட திறமைமிக்க உள்ளாட்டுத் தொகுப்பாளர் ஒருவரை நியமனம் செய்திருந்தால் அத்தொகையில் சுமார் 20% மட்டுமே செலவாகியிருக்கும் என மலேசிய வானொலி மற்றும் ‘எஸ்ட்ரோ’ தமிழ் பிரிவின் முன்னாள் ஊழியர் கண்ணா சிம்மாதிரி கூறினார்.

“இந்நாட்டில் நம் சமூகத்தின் மனக் குமுறல்கள், தமிழ் பள்ளி விவகரம், எஸ்.பி.எம். மற்றும் எஸ்.டி.பி.எம். மாணவர்கள் எதிர் தோக்கும் பிரச்சனைகள், பல்கலைக்கழக நுழைவு, கோயில் விவகாரங்கள், மத மாற்றம், 3 ஆர்(3R), அரசாங்க வேலைகளில் இன பாடுபாடு என, எண்ணற்ற சிக்கல்களில் நாம் மூழ்கிக் கிடக்கிறோம்.”

“இதுபற்றியெல்லாம் அறிந்திராக, பரிட்சயமில்லாத ஒருவர் எப்படி நம் சமூகம் சார்ந்த விவாத மேடையை ஆக்ககரமாக வழிநடத்த இயலும்,,” என கண்ணா சிம்மாதிரி கேள்வி எழுப்பினார்.

“தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகள் நம் சமுகத்திற்கு பயனாக சென்றடைய வேண்டுமேத் தவிர வெறும் வசீகர அழகுக்காக படைக்கப்படக் கூடாது,” என்றார் அவர்.

“நம் நாட்டு சட்ட திட்டங்கள், கலை கலாசாரம் போன்ற எதுவுமே தெரியாத ஒரு நடிகை, ‘எஸ்ட்ரோ’ சந்தாதாரர்களின் அனுகூலங்கைளை நிறைவு செய்யவும் வகையில் எப்படி நிகழ்ச்சிகளைப் படைத்த இயலும்,” என முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமாச்சி துரைராஜுவும் கேள்வி எழுப்பினார்.

“இந்நாட்டில் நாம் எதிர்நோக்கும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றி கவுதமிக்கு ஏதாவது தெரியுமா,” என்று அவர் வினவினார்.

“ஒரு பிரச்சனையை எப்படி அனுகுவது என நன்கு அறிந்துள்ள, தமிழ் பற்றுடைய நிறைய நெறியாளர்கள் நம்மிடையே இருக்கிறார்கள் எனும் விவரம் ‘எஸ்ட்ரோ’ தமிழ் பகுதி பொறுப்பாளர்களுக்கு எப்படி தெரியாமல் போய்விட்டது,” என்றார் அவர்.

‘எஸ்ட்ரோ’ தமிழ் பகுதி பொறுப்பாளர்களின் தான்தோன்றித்தனமான இச்செயலுக்கு உலகத் தமிழர் பாதுகாப்புச் செயலகத்தின் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராச்சாமியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.