கோடிகணக்கில் பண மோசடி நிகழ்கிறது, யார்  உடந்தையாக இருப்பது யார்?

இராகவன் கருப்பையா – ‘ஸ்கேம்'(Scam) எனப்படும் பண மோசடி நடவடிக்கைகள் நம் நாட்டில் தற்பொழுது  வரம்பு மீறிப் போய்க் கொண்டிருக்கிறது.

அவ்வப்போது இதன் தொடர்பாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிற போதிலும் இத்தகையக் குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் தண்டிக்கப்படுகிறார்களா தெரியவில்லை.

அதிகமான பணம் வைத்திருப்பவர்கள் அதனை வீட்டில் வைத்திருந்தால் பாதுகாப்பு இருக்காது என்பதால்தான் பெரும்பாலான சமயங்களில் பொருளகக் கணக்குகளில் சேமித்து வைத்திருக்கின்றனர்.

ஆனால் தற்போது அந்தப் பணம் ‘வீட்டில் இருந்திருந்தால் கூட பாதுகாப்பாக இருந்திருக்கும்’ என்று எண்ணும் அளவுக்கு மோசடிக் கும்பல்களிலிடம் மில்லியன் கணக்கான ரிங்கிட்டை இழந்து பரிதவிக்கும் எண்ணற்ற வங்கிக் கணக்கு உரிமையாளர்கள் சோகக் கண்ணீர் வடிக்கின்றனர்.

கடந்த 2023ஆம் ஆண்டில் நாடளாவிய நிலையில் 3,027 பேர்கள் மொத்தம் 158 மில்லியன் ரிங்கிட்டையும் சென்ற ஆண்டில் 2,825 பேர்கள் 142 மில்லியன் ரிங்கிட்டையும் மோசடி பேர்வழிகளிடம் இழந்ததாக காவல்துறை அறிவித்தது.

இவ்வாண்டு இதுவரையில் மொத்தம் 31,949 பேர்கள் சம்பந்தப்பட்ட மோசடிகளின் மதிப்பு 1.5 பில்லியன் ரிங்கிட்டை எட்டுவதாக  உள்துறை அமைச்சர் சைஃபுடின் கடந்த வாரம் தெரிவித்தார்.

பணத்தை இழந்தவர்களில் சிலர் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் யாரிடமும் புகார் செய்யாமல் மவுனமாக இருப்பதும் உண்டு. அந்த விவரங்கள் காவல்துறையின் புள்ளியியலில் இருக்காது.

இவ்வாண்டில் இத்தகைய மோசடிகள் தொடர்பாக மொத்தம் 11,800 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சைஃபுடின் கூறியது நல்ல செய்திதான் எனும் போதிலும் ‘முளையில் கிள்ளும்’ நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதா தெரியவில்லை.

போலீஸ் நிலையம், நீதிமன்றம், பொருளகம், வருமான வரி இலாகா, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அல்லது தபால் இலாகா, போன்ற அலுவலகங்களில் இருந்து அழைப்பதாகக் கூறிதான் தங்கள் மோசடி வேலையைத் தொடக்குகின்றனர் இந்த ஏமாற்றுப் பேர்வழிகள்.

எனினும் பொருளகக் கணக்கில் 1,000 ரிங்கிட்டோ 2,000 ரிங்கிட்டோ வைத்திருப்பவர்களை இந்த சூழ்ச்சிதாரர்கள் அழைப்பதாகத் தெரியவில்லை.

தங்களுடையக் கணக்குகளில் இலட்சக்கணக்கான, அல்லது மில்லியன் கணக்கான ரிங்கிட் வைத்திருப்பவர்களை குறி வைத்துதான் அந்த அழைப்புகள் வருவதாக நம்பப்படுகிறது.

அப்படியென்றால் யாருடையக் கணக்கில் அதிகமான பணம் இருக்கிறது அல்லது எவ்வளவு பணம் சேமிப்பில் உள்ளது என்று அந்த ஏமாற்றுக்காரர்களுக்கு எப்படி தெரிகிறது?

கணக்கு விவரங்களையும் தொலைபேசி எண்களையும் அந்த மோசடிக் கும்பல்களிடம் யார் கொடுக்கிறார்கள்? பொருளக சேமிப்பு கணக்கு விவரங்கள் 3ஆம் தரப்பினர் யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டிய ஒரு ராசியம் அல்லவா!

இத்தகையக் கேள்விகளுக்கு பதில் கண்டுபிடிக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்பாகும். மாறாக, ‘தும்பை விட்டுட்டு வாலைப் பிடிப்பதைப் போல்’ இருக்கக் கூடாது.

முளையிலேயே கிள்ளி எறிவதைப் போல, இதற்குக் காரணமானவர்களை அடையாளம் கண்டு அவர்களை கடுமையாகத் தண்டித்தால், நம் நாட்டில் இப்பிரச்சனை மேலும் மோசமாகாமல் தடுக்க வாய்ப்பிருக்கிறது.