அம்னோவின் ஆர்பாட்டம் அறியாமையா?

இராகவன் கருப்பையா – ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கும் மேல் இந்நாட்டின் நாடாளுமன்றத்தை ஆக்கிரமித்து இஷ்டம் போல் ஆட்சி புரிந்த அம்னோவின் தற்போதைய நிலை என்ன என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான்.

தற்போது அக்கட்சி ‘சிறகொடிந்த பறவை’யாக தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிற போதிலும் அதன் தலைவர்களில் பலர் பழைய மாதிரியே மமதையோடு நடந்து கொள்வது நமக்கு வியப்பாக உள்ளது.

ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்குப் பிறகும் எந்த ஒரு எதிர்கட்சியும் அருகில் நெருங்க முடியாத அளவுக்கு அக்கட்சி பெரும்பான்மை நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டு தான்தோன்றித்தனமாக ஆட்சி செய்த வரலாறு கடந்த 2018ஆம் ஆண்டில்தான் ஒரு முடிவுக்கு வந்தது.

தங்களை யாரும் அசைக்க முடியாது எனும் ஆணவத்தில் பல வேளைகளில் அவர்கள் நடந்து கொண்ட விதம், மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் எல்லாமே வெகுசன மக்களுக்கு எரிச்சலூட்டியது.

ஆனால் தற்போதைய சூழலில் 222 தொகுதிகளைக் கொண்ட நாடாளுமன்றத்தில் வெறும் 25 உறுப்பினர்களை மட்டுமே வைத்துக் கொண்டு அக்கட்சியினர் காட்டும் பந்தாவானது, அவர்களுடைய அகம்பாவம் இன்னும் அடங்கவில்லை என்பதையே புலப்படுத்துகிறது.

கட்சி அடிப்படையில் பார்த்தால் 43 தொகுதிகளைக் கொண்ட பாஸ், 40 உறுப்பினர்களுடன் ஜ.செ.க. மற்றும் 31 தொகுதிகளோடு பி.கே.ஆர்., ஆகிய கட்சிகளுக்குக் கீழே அம்னோ 4ஆவது இடத்தில்தான் உள்ளது.

அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு, தற்போது உள்ள 25 தொகுதிகளைக் கூட அக்கட்சியினர் தற்காத்துக் கொள்ள இயலுமா தெரியாது.

இதனை மறந்து, ஏதோ தங்களுடைய பளுவை நம்பித்தான் நாட்டின் நிர்வாகம் செயல்படுகிறது என்பதைப் போல வீண் கர்வம் கொண்டு எல்லாரையும் மிரட்டிப் பார்க்கிறார்கள்.

நாட்டின் சட்டதிட்டங்கள், நீதிமன்றங்கள் எல்லாமே அவர்களுக்கு அடிபணிந்து செல்பட வேண்டும் என்று எண்ணும் அவர்களுடைய போக்கு நமக்கு வியப்பாகத்தான் உள்ளது.

முன்னாள் பிரதமர் நஜிபின் நீதிமன்ற விவகாரத்தில் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் நமது நீதித்துறைக்கு சவால்விடும் வகையில் உள்ளது மட்டுமின்றி மற்றவர்களின் கண்களுக்கு கேலிக் கூத்தாகவும் இருக்கிறது.

‘உலக மகாத் திருடன்’ எனும் அவப் பெயரை சுமந்து சிறை தண்டனை அனுபவிக்கும் அவரை அரசாங்கம் தலையிட்டு விடுவிக்க வேண்டும் என்பதைப் போல அவர்கள் கோஷமிடுகின்றனர்.

நீதித்துறையை ஆளும் அரசியல்வாதிகள் கட்டுப்படுத்த வேண்டும் என அறிவிலித்தனமாக எதிர்பார்க்கின்றனர்.

“பக்காத்தான் அரசாங்கம் நஜிபுக்கு உதவவில்லை. எனவே ஒற்றுமை அரசை விட்டு அம்னோ வெளியேற வேண்டும்,” என்றெல்லாம் வீண் விதண்டாவாதம் செய்வது அவர்களுடைய முதிர்ச்சியின்மையைத்தான் காட்டுகிறது.

ஐந்து நிலைகளிலான நீதிமன்றங்களைச் சேர்ந்த மொத்தம் 9 நீதிபதிகள் ஒருசேர அவரை சிறைக்கு அனுப்பியுள்ள போதிலும், “அவருக்கு நீதி கிடைக்கவில்லை, அவர் விடுவிக்கப்பட வேண்டும்,” என்று வாதிடுகின்றனர்.

அவர் மீது பரிதாபப்படும் அக்கட்சியினர், மற்றவர்களும் அதே போல பரிதாபப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இல்லையேல் கோபப்படுகிறார்கள்.

நீதித்துறையை பாராட்டினாலும் சினமடைகிறார்கள். நீதிமன்றங்களையும் அவற்றின் நடுநிலையான தீர்ப்புகளையும் இவர்களைப் போலவே மற்றவர்களும் வசைப்பாட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்.

அவர்கள் வச்சதுதான் சட்டம். அவர்களுக்கு வேண்டிய மாதிரிதான் மற்றவர்களும் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது மட்டுமின்றி பல வேலைகளில் கட்டாயப்படுத்தவும் செய்கின்றனர்.

இத்தகைய அகம்பாவத்தையும் சுயநலப் போக்கையும் கொண்டுள்ள அம்னோ கட்சியினர் எதனை நோக்கி பயணிக்கின்றனர் என்று தெரியவில்லை. ஏனெனில் மிக விரைவில் அக்கட்சி சுவடு தெரியாமல் மறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காரணம் அதனை இயக்க தேவைப்படும் பொருளாதாரம் தற்போது முடக்கப்படுள்ளது போல் தோண்றுகிறது.