வழிபாட்டுத் தளங்கள் மீதான அன்வாரின் கருத்து நியாயமா?

இராகவன் கருப்பையா – முறையான அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள வழிபாட்டுத் தளங்களைத் தகர்ப்பதற்கு நகரான்மைக் கழகங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் அன்வார் செய்த அதிரடியான அறிவிப்பு நமக்கு அதிர்ச்சியையும் வியப்பையும் மட்டுமன்றி கோபத்தையும் ஏற்படுத்துகிறது.

“We cannot allow the mushrooming (of houses of worship) being built just anywhere, under trees… everywhere,” he said, adding that local councils have been ordered to demolish any houses of worship that were built illegally.- இனிவரும் காலங்களில் சட்டவிரோதமாக வழிபாட்டுத் தளங்கள் கட்டப்படுவதற்கு அனுமதி வழங்கப்படாது என்பது நியாயமானக் கருத்துதான். அதில் மாற்றுக் கருத்து இருக்காது.

ஆனால் பல இடங்களில் நூற்றாண்டுக் காலமாக இருந்து வரும் வழிபாட்டுத் தளங்களை உடைக்கச் சொல்வது நமக்கு நியாயமாகத் தெரியவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக இந்து மதத்திற்கு எதிராக மானாவாரியாக அறிக்கைகளை வெளியிட்டு வரும் ஸம்ரி எனப்படும் வினோத் காளிமுத்து தெரு ஆர்ப்பாட்டத்தின் வழி சொன்ன விஷயங்களை உடனடியாக அமுல்படுத்துவதைப் போல் உள்ளது அன்வாரின் போக்கு.

காலங்காலமாக இருந்துவரும் வழிபாட்டுத் தளங்கள், குறிப்பாக நகர்ப்புறங்களுக்கு அப்பால் உள்ள இந்துக் கோயில்கள் எம்மாதியான சூழ்நிலையில் கட்டப்பட்டன என்று சிலாங்கூர், கிளேங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவும் பேராக், தாப்பா தொகுதி உறுப்பினர் சரவணனும் ஏற்கெனவே அரசாங்கத்திற்கு விலாவாரியாக விளக்கியுள்ளனர்.

இருந்த போதிலும் அவர்களுடைய விளக்கங்களையோ அந்த ஆலயங்களின் உண்மையான நிலவரங்கள் குறித்தோ அன்வார் சற்றும் கருத்தில் கொள்ளவில்லை என்றே தெரிகிறது.

அவருடைய மூர்க்கத்தனமான உத்தரவு, ‘மடை திறந்த வெள்ளத்தை’ ஏற்படுத்தி நூற்றுக் கணக்கான ஆலயங்கள் உடைபடும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

நகர்ப்புறங்களுக்கு வெளியே, குறிப்பாக தோட்டப்புறங்களில் உள்ள பல கோயில்கள் நூறாண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தவையாகும்.

ரப்பர் தோட்டங்களில் பால்மரம் வெட்ட தமிழகத்திலிருந்து இங்கு வரவழைக்கப்பட்டத் தொழிலாளர்கள் அதிகாலை இருட்டு வேளைகளில் பணிக்குச் செல்லும் போது தங்களுக்குப் பாதுகாப்புத் தேவை எனும் அடிப்படையில் ஆங்காங்கே கோயில்களை நிர்மாணித்தனர்.

தோட்ட உரிமையாளர்கள், குறிப்பாக வெள்ளைக்கார முதலாளிகளின் அனுமதியோடுதான் அவ்வாலயங்கள் கட்டப்பட்டன என்று எல்லாருக்கும் தெரியும்.

அந்த காலக்கட்டத்தில் மாநகர் மன்றங்களோ  நகரான்மைக் கழகங்களோ இதர அரசாங்க நிர்வாகங்களோ கிடையாது.

நாளடைவில் தனியார் நிறுவனங்களோ அரசாங்கமோ அத்தகைய இடங்களை கையகப்படுத்திய போதுதான் சம்பந்தப்பட்டக் கோவில்கள் நிர்கதியாகும் நிலை ஏற்பட்டது.

எனவே இந்தகைய ஆலயங்களை தகர்த்தெரியுங்கள் என்று முரட்டுத்தனமாக உத்தரவிடுவதை விடுத்து அவற்றை வழிமுறைபடுத்துவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என்று அன்வார் குறிப்பிட்டிருக்கலாம்.

பேச்சுவார்த்தைகளின் வழி அல்லது இணக்கப் போக்கின் வாயிலாக அந்த ஆலயங்களை அப்புறப்படுத்தவோ இடமாற்றம் செய்யவோ வாய்ப்புகள் உள்ளன என்பதை அவர் உணர வேண்டும்.

தலைநகரின் மையத்தில் மஸ்ஜிட் இந்தியா வளாகத்தில் 130 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு அண்மையில் இடமாற்றம் செய்ய வகை செய்யப்பட்ட தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் இதற்கு நல்லதொரு உதாரணமாகும்.