இந்திய வெளியுறவு அமைச்சரை TNA சந்தித்தது

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தனது இலங்கை பயணத்தை ஆரம்பித்துள்ளார். திங்களன்று கொழும்பு வந்திறங்கிய அமைச்சர் கிருஷ்ணா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரையும் சந்தித்துள்ளார்.

நான்கு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர், இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸையும், பிற இலங்கை அரசாங்கப் பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

வடக்கில் உள்ள யாழ்ப்பாணம் முதல் தென் முனையில் உள்ள காலி வரையில் பல இடங்களுக்கும் அவர் இந்தப் பயணத்தின்போது செல்லவுள்ளார்.

இலங்கை அரசாங்கத்துடன் அவர் நடத்துகின்ற பேச்சுவார்த்தைகளில், இலங்கையின் இனச் சிறுபான்மையினருக்கும் மாகாண நிர்வாகங்களுக்கும் கூடுதல் அதிகாரம் வழங்கும் தீர்வுத் திட்டம் என்பது முக்கிய விவகாரமாக இடம்பெறும் எனத் தெரிகிறது.

இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவுடன் தாங்கள் மேற்கொண்ட சந்திப்பு பற்றி த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசியிடம் கருத்து வெளியிட்டார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது மற்றும் இனப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பில் இலங்கை அரசுடன் கடந்த ஒரு வருட காலமாக பல தவணைகளில் த.தே.கூ. உறுப்பினர்கள் பேசிவருகின்ற போதிலும், அப்பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏதும் வரவில்லை என்பதை இந்திய வெளியுறவு அமைச்சரிடம் விளக்கியதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

இந்தியாவிடம் பல முறை வாக்குறுதிகளை அளித்த்திருந்தும், இழுத்தடிப்பு செய்யும் நோக்கிலேயே இலங்கை அரசாங்கம் செயல்பட்டுவருவதாக அமைச்சர் கிருஷ்ணாவிடம் தாங்கள் முறையிட்டதாக அவர் தெரிவித்தார்.

காணி தொடர்பான அதிகாரங்கள், பொலிஸ் அதிகாரங்கள் போன்றவற்றை வடக்கு கிழக்கு மாகாண நிர்வாகங்களுக்கு வழங்கப்போவதில்லை என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருக்கிறார் என்று தாங்கள் உணருவதாக இந்திய அமைச்சரிடம் தாங்கள் விளக்கியதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.

TAGS: