யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மத்தியில் அப்துல் கலாம் உரை

இலங்கை சென்றுள்ள இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வடக்கிலுள்ள யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

முதலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குச் சென்று, அங்கு யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினர் மத்தியில் உரையாற்றினார். அத்துடன் பழைமை வாய்ந்த கல்லூரிகளில் ஒன்றாகிய யாழ். இந்துக் கல்லூரிக்கும் அவர் சென்றிருந்தார்.

அப்துல் கலாம் கலந்து கொண்ட நிகழ்வுகள் இடம்பெற்ற மண்டபங்களில் அனைவரையும் உள்ளடக்குவதற்கான இடவசதியின்மை காரணமாக அவற்றில் கலந்து கொள்ள முடியாத ஏமாற்றத்துடன் பலர் திரும்பிச் செல்ல நேரிட்டது.

இலங்கை விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சர் திஸ்ஸ விதாரண, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா, வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் இந்த நிகழ்வுகளில் முக்கியமாகக் கலந்து கொண்டார்கள்.

பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரக அலுவலகத்திற்கும் அப்துல் கலாம் பயணம் மேற்கொண்டார்.

இதேவேளை, நேற்று முன்தினம் கொழும்பில் உள்ள அலரி மாளிகையில் இலங்கை குடியரசுத் தலைவருடன் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அப்துல் கலாம் சிங்கள மொழியில் உரையாற்றினார் என்பது குறிப்படத்தக்கது.

TAGS: