இலங்கை அரசின் ஊடக அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் தொடர்ந்து ஊடகங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகக் கூறி, இலங்கையின் தலைநகர் கொழும்பில் புதன்கிழமை செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர்.

‘இலங்கை அரசு, ஊடக அடக்குமுறையை முன்னெடுத்து வருகிறது’ என்று இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகிறார்கள்.

தாங்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த இடத்தில் அரசுக்கு ஆதரவான இரண்டு அமைப்புகள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டத்தால், ஊடகத்துறையினரின் ஆர்ப்பாட்டம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.

இலங்கை அரசு ஊடக அமைப்புகள் மீது மேற்கொள்ளும் அடக்குமுறைகளை எதிர்த்து தாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக சுதந்திர ஊடக அமைப்பின் துணைத் தலைவரான ஜே யோகராஜ் கூறுகிறார்.

ஆனால் இலங்கையில் ஊடகத்துறையினர் மீது கொலை, கடத்தல் போன்ற சம்பவங்கள் ஜனவரி மாதத்திலேயே அதிகம் இடம்பெற்றதால், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ‘கறுப்பு ஜனவரி’ என்று பெயரிட்டு தாங்கள் நடத்த தீர்மானித்ததாக தமிழ் ஊடக ஒன்றியத்தின் உபதலைவர் அமிர்தநாயகம் நிக்ஸன் கூறுகிறார்.

நீதிமன்றம் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கியிருந்தாலும், தாங்கள் ஏற்பாடு செய்திருந்த இடத்தில் அரசுக்கு ஆதரவானவர்கள் வந்து எதிர் போராட்டம் நடத்த முற்பட்டதாலேயே தாங்கள் வேறு இடத்தில் தமது எதிர்ப்பை தெரிவித்ததாகவும் நிக்ஸன் சொல்கிறார்.

‘கறுப்பு ஜனவரி’ ஆர்ப்பாட்டத்தில் ஊடகத்துறையினருடன் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

TAGS: