இலங்கையின் வான்பரப்பில் அமெரிக்க வானூர்திகள் ஊடுருவல்

இலங்கையின் வான்பரப்பில் அமெரிக்கப் போர் வானூர்திகளின் ஊடுருவல் இடம்பெற்றதாக இலங்கையின் வான்படை மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளது.

கடந்த வாரம் அமெரிக்கப் போர் வானூர்திகள் இலங்கையின் வான்பரப்பில் அத்துமீறின என்ற குற்றச்சாட்டை இலங்கை வான்படையினர் சுமத்தியிருந்தனர்.

எனினும், இந்த குற்றச்சாட்டை மறுத்த அமெரிக்கத் தூதரகம், இலங்கை வான்பரப்பில் அவ்வாறான ஊடுருவலில் அமெரிக்க வானூர்திகள் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்தது. அத்துடன் அமெரிக்க ரொனால் றீகன் வானூர்தி தாங்கிக் கப்பலில் இருந்து எந்தவொரு போர் வானூர்திகளும் இலங்கை வான்பரப்பில் ஊடுருவவில்லை என்றும் அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்தது.

தமது வான் கண்காணிப்புக் கருவிகளில் அமெரிக்க வானூர்திகள் இலங்கையின் வான்பரப்பில் ஊடுவியதை தெளிவாக அவதானித்ததாக இலங்கை வான்படை பேச்சாளர் குரூப் கேப்டன் அன்றூ விஜயசூரிய தெரிவித்தார்.

இதனிடையே, இலங்கை வான்பரப்பில் அமெரிக்கப் போர் வானூர்திகள் வான்பரப்பில் ஊடுருவியமை குறித்து இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.