கனடா செல்லும் பயணத்தில் டோகோவில் 200 தமிழர்கள் கைது

மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் சட்ட விரோதமான முறையில் தங்கியிருந்தார்கள் என்ற குற்றத்தின் பேரில் பெண்கள், குழந்தைகள் உட்பட 200-க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமொன்றில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சட்ட விரோத ஆட்கடத்தல் முகவர்களினால் கனடாவிற்கான பயணத்தின் நிமித்தம் அழைத்துச் செல்லப்பட்டு டோகோவிலுள்ள வீடுகளில் தங்க வைக்கப்பட்டிருந்தபோது இவர்கள் அந்நாட்டு காவல்துறையினரின் சுற்றிவளைப்பில் சிக்கியுள்ளனர்.

தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்தவர்கள் புலம்பெயர்ந்தோருக்கான அனைத்துலக அமைப்பின் உதவியுடன் நாடு திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

கொழும்பிலிருந்து சட்டபூர்வமாகவே 4 மாதங்களுக்கு முன்னர் டோகோ நாட்டை சென்றடைந்ததாக மட்டக்களப்பு செங்கலடிப் பிரதேசத்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் தெரிவித்தார்.

டோகோவில் 5 வீடுகளில் தங்க வைக்கப்பட்டிருந்த 209 பேரில் 4 முஸ்லிம்களைத் தவிர ஏனையோர் தமிழர்கள் என்றும் அவர்களில் ஓராண்டுக்கு முன்னரே அங்கு சென்றவர்களும் இருந்ததாக அவர் தெரிவித்தார்.

TAGS: