தமிழ்நாட்டில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் மதுபோதையில் குழப்பம் விளைவித்த இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானை தமிழக காவல்துறையினர் தூக்கிச்சென்று அவரது அறைக்குள் தள்ளிப் பூட்டிய சம்பவம் ஒன்று கோவையில் இடம்பெற்றுள்ளது.
திருச்சியில் நடைபெற்ற தனது நண்பர் இல்லத் திருமணத்திற்கு இலங்கை கிராமிய தொழில்துறை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் சென்றிருந்தார்.
பின்னர், தனது நண்பர் ஒருவரை சந்திக்க கோவையிலுள்ள நட்சத்திர விடுதி ஒன்றுக்குச் சென்ற அவர், சம்பவம் தினத்தன்று நள்ளிரவு மதுபோதையில் விடுதி வரவேற்பாளர் பகுதிக்குச் சென்று அங்கிருந்த பெண் பணியாளர்களிடம் தரக்குறைவாகப் பேசியதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் விடுதிப் பணியாளர்கள் அவரை சமாதானப்படுத்தி அறைக்கு அனுப்ப முயன்றனர். அதற்கு அவர், “என்னை ஒன்றும் செய்ய முடியாது, நான் இந்திய அரசின் விருந்தினர்” என்று கூறி அறைக்குத் திரும்ப மறுத்துள்ளார்.
ஆறுமுகன் தொண்டமானின் குழப்பம் நீடிக்கவே, அதுபற்றி காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் சுந்தரமூர்த்தி உத்தரவின்பேரில், உதவி ஆணையாளர் அப்பாதுரை, பந்தயத்திடல் ஆய்வாளர் கணேசன் ஆகியோர் அங்கு சென்று ஆறுமுகன் தொண்டமானைச் சமாதானப்படுத்தினர்.
அவர், தொடர்ந்து வாக்குவாதம் செய்யவே, காவல்துறையினர் தூக்கிச் சென்று அவரது அறையில் தள்ளி பூட்டினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.