புலிகள் பெண்களுக்கு ஆளுமையையும் அதிகாரத்தையும் கொடுத்திருந்தார்கள்

தமிழீழ விடுதலைப்புலிகள் தங்கள் இனப் பெண்களுற்கு அதிகாரத்தையும் ஆளுமையையும் தாராளமாகக் கொடுத்திருந்தார்கள் என்று இலங்கை விவகாரங்களில் அதீதமாக ஈடுபட்டுவரும் கனடிய செனட்டர் திருவாட்டி மொபினா ஜபார் தெரிவித்தார்.

கனடிய மனிதவுரிமை மன்றத்தினால் நடத்தப்பட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கைக்கு சமாதான காலத்திலும் தற்போதும் பல தடவைகள் பயணம் செய்த மொபினா ஜபார் அவர்கள் களநிலைமைகளை தெளிவுபட எடுத்துக் கூறியதுடன் பேச்சுவார்த்தை மூலமான ஒரு தீர்விற்கான அவசியம் அங்கேயிருப்பதையும் சூடானிற்காக கனடாவின் பிரதிநிதியாக இருந்தவருமான மொபினா ஜபார் சுட்டிக் காட்டினார்.

குறிப்பாக பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட புலிகளின் பெண்கள் குழுவினருக்கு விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் முன்னுரிமை வழங்கியிருந்ததுடன் முடிவுகளை எடுக்கும் அதிகாரங்களையும் அவர்களுக்கு வழங்கியிருந்தது.

அத்துடன், சிறப்பான முடிவுகளை எடுக்கும் ஆற்றலும் அதிகாரமும் அவர்களிடம் காணப்பட்டதாக கூறும் செனட்டர் மொபினா, அரச தரப்பில் கலந்து கொண்ட பெண்களோ தங்களின் முடிவிற்காக மேலிடத்தின் பதிலிற்காகக் காத்திருந்தார்கள் என்பதையும் சுட்டிக் காட்டினார்.

இலங்கையிலுள்ள பெண்களுடன் தொடர்ந்து வேலைத்திட்டங்களில்தான் ஈடுபட்டு வருவதால் கனடிய மனிதவுரிமை மன்றத்தின் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பெருமையாகக் கருதுவதாகவும் தெரிவித்த செனட்டர் மொபினா ஜபார், ஒரு போரின் முடிவில் ஒரு இணக்கப்பாடு ஏற்பட வேண்டுமென்பதே உலக நியதியாக இருப்பதைச் சுட்டிக் காட்டியதோடு தங்களிற்கு விருப்பமில்லாத ஒரு முடிவு போரின் முடிவில் ஏற்பட்டதையும் இனங்களிற்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான தேவை இன்னமும் நிறையவே இருக்கிறது என்பதையும் இன்னமும் தமிழினத்திற்கெதிரான நிகழ்வுகள் தொடர்வதையும் தெரிவித்தார்.