கொழும்பில் எதிர்க்கட்சிகள் மாபெரும் ஆர்ப்பாட்டம்

இலங்கை தலைநகர் கொழும்பில் எரிபொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து எதிர்க்கட்சிகளினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியுள்ளனர்..

பெட்ரோல் விலையேற்றத்தால் ஏற்பட்ட பிரச்சனைக்கு இலங்கை அரசாங்கத்தின் முகாமைத்துவ குறைபாடே காரணம் என்கிறார் ஆய்வாளர் எஸ். பாலகிருஷ்ணன்.

நேற்று பிற்பகல் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக ஐக்கிய தேசியக் கட்சி, மேல்மாகாண மக்கள் முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல எதிர்க்கட்சிகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.

அதனை அடுத்து அங்கிருந்து கோட்டை தொலைபேசி பணிமனை நோக்கி இவர்கள் ஊர்வலமாகச் செல்ல முயற்சித்த போது அவர்களை கால்துறையினர் தடுத்தனர்.

அதனையடுத்த இழுபறியின் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் தாக்குதல் நடத்தினர்.

இதனையடுத்து கலைந்து ஓடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் கூடி முன்னேற முயன்றபோது அவர்கள் மீது மீண்டும் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.

ராஜபக்சே தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்க மக்கள் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் அறிவித்த அடுத்த சில நாட்களில் இந்த ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதான எதிர்க்கட்சியின் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதுடன் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டர். அத்துடன் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன காயமடைந்தார்.

TAGS: