ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைச் சபை முன்றலில், பெப் 27ம் நாள் திங்கட்கிழமை, மாபெரும் எழுச்சி நிகழ்வாக பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுதிரண்டுள்ளனர்.
ஐ.நா மனித உரிமைச் சபையில், சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான தீர்மானமொன்று நிறைவேற்றப்படவுள்ள சூழலில், சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையினைப் பொறிமுறையொன்றினை அமைக்க, இந்த எழுச்சி நிகழ்வு சர்வதேசத்தை வலியுறுத்தி நின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த நிகழ்வில், சுவிசின் பல மாநிலங்களிலில் இருந்தும், பிரித்தானியா, ஜேர்மன், பிரான்ஸ் என ஐரோப்பாவின் பல நாடுகளில் இருந்தும், ஒன்றுதிரண்ட மக்கள், ஐ.நா முன்றலை நிறைத்தனர்.
தமிழீழத் தேசியக் கொடியுடன், பல நாடுகளின் தேசியக் கொடிகளை ஏந்தியவாறும், சர்வதேசத்தை நோக்கிய வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் மக்கள் நின்றிருந்தனர்.
கடந்த சனவரி மாதம் 28ம் நாள் லண்டனில் இருந்து, நா.தஅராசங்கத்தின் மக்கள் பிரதிநிதி ஜெய்சங்கர் முருகையா தலைமையில், தொடங்கிய நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம், பிரான்ஸ் வழியே இத்திடலை வந்தடைந்த போது சிறப்புடன் மக்கள் வரவேற்றுக் கொண்டனர்.
சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தி, வெளிவிவகார அமைச்சுக்களுக்கும், வெளிநாட்டு தூதரங்களுக்கும் அனுப்பி வைக்கவென வெளியிடப்பட்ட தபால் அட்டைகளில், 4000 அட்டைகள் மக்களினால் ஆர்வத்துடன் வாங்கி செல்லப்பட்டது.
ஐ.நாவுக்கு எதிராகவும், சர்வதேசத்துக்கு எதிராகவும் கொழுப்பிலும், பிற இடங்களிலும் சிறிலங்கா அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்பாட்டங்களை, செய்திகளாக வெளியிட்டுள்ள பல சர்வதேச ஊடகங்கள் பலவும், ஜெனீவா ஐ.நா முன்றிலில் இடம்பெற்ற இந்த நிகழ்வினையும் எதிரெதிர் நிகழ்வுகளாக வர்ணித்து, செய்திகள் வெளியிட்டுள்ளன.
நிகழ்வுகள் :
அகவணக்கத்துடன் தொடங்கிய எழுச்சி நிகழ்வில், பொதுச்சுடரினை நா.த.அரசாங்கத்தின் உள்துற அமைச்சர் நகாலிங்கம் பாலசந்திரன் அவர்களும், ஈகைச் சுடரினை கே மேரி கொலின் – மற்றும் நா.த.அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளான அருட் தெய்வேந்திரன், பாலன் சிவபாதம் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
ஈகைப்பேரொளி முருகதாசன், சமீபத்தில் சிரியாவில் படுகொலை செய்யப்பட்ட ஊடகப்போராளி மெரி கொல்வின் ஆகியோரின் திருவுருவப்படத்துக்கான முதன்வணக்கத்தை, ஜெய்சங்கர் முருகையா செலுத்தினார்.
கௌரவிப்பு :
சிறப்பு நிகழ்வாக நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணத்துக்கான கௌரவிப்பு இடம்பெற்றிருந்தது. நா.தஅரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் வாழ்த்துக்கவி படிக்க, பிரதமர் வி.உருத்திரகுமாரனின் வாழ்த்துமடலை சின்னப்பு யோகராஜா அவர்கள் கையளிக்க, அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் அவர்கள் வாசித்து வழங்கி நடைப்பயணத்தை கௌரவித்தார்.
உரைகள் :
ஈழம்கவுன்சில் பிரதிநிதி அன்னா அனோர், ஈழஆதரவரவுச் சமூகச் செயற்பாட்டாளர் வெறேனா கிறாப் மற்றும் பிரான்சில் ஒபவில்லியஸ் பகுதியின் நகரபிதா ஜக் சல்வடோர் ஆகியோர் சிறப்புரைகளை வழங்கினர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல், வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர்
மாணிக்கவாசகர், அவைத்தலைவர்பொன் பாலராஜன், தகவல்துறை துணை அமைச்சர் சுதன்ராஜ், மக்கள் பிரதிநிதிகளான ஜெய்சங்கர் முருகையா, மகிந்தன் ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.
வெளியீடு :
ஈழத்தமிழினத்தின் மீதான சிறிலங்காவின் இனப்படுகொலையின் சாட்சியப் பதிவாக, சர்வதேச இராஜதந்திரிகள், அரசுகள், அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள் என பலமட்டங்களுக்கும் கையளிக்கவல்ல கையேடு ஒன்றும் இங்கு வெளியிடப்பட்டது.
செய்தியாளர் கலையழகன் அவர்கள் கையேடு குறித்து அறிமுக உரையை வழங்கினார்.
நா.த.அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதி ஜெயம் அவர்கள் வெளியிட்டு வைக்க பிரதிநிதிகள் பல் கையேட்டடைப் பெற்றுக் கொண்டனர்.
கலையரங்கு :
பிரான்சின் பிரபல கலைஞர் இந்திரன் அவர்கள், ஈழத்தமிழர்களின் தேசியக் கலைவடிவமாகவுள்ள கூத்தின் பாடல்வடிவில், சர்வதேசத்தை நோக்கிய பாவொன்றினை வழங்கினார்.
டென்மார்கில் இருந்து வருகை தந்த நடனக்கலைஞர்கள், மக்களுக்க அரசியல் விழிப்பும், எழுச்சியும் ஊட்டும் வண்ணம், நடனங்களை வழங்கினர்.