அவசரப்பட்டு முடிவு எடுக்க முடியாதாம்: சொல்கிறார் கருணாநிதி

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்திற்கு, இந்தியா ஆதரவு தெரிவிக்காவிட்டால் மத்திய அரசுக்கு தி.மு.க., கொடுத்து வரும் ஆதரவை மீட்டுக்கொள்ள நேரிடும் என தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியதாக சில நாட்களாக செய்திகள் வெளியாகிருந்தன.

ஆனால், இலங்கை மீதான அமெரிக்க தீர்மானம் குறித்த பிரச்னையில், மத்திய அரசுக்கு கொடுத்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்ளும் விஷயத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி தற்போது கூறியுள்ளார்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு, மதுரையில் இருந்து சென்னை வந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, வானூர்தி நிலையத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசும் போதே இதனைத் தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்திற்கு, இந்தியா ஆதரவு தெரிவிக்காவிட்டால் மத்திய அரசுக்கு தி.மு.க., கொடுத்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வீர்களா? என செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி;

“இதே கேள்வியை இரண்டு நாட்களுக்கு முன் கேட்டீர்கள். அப்போதே, தி.மு.க., செயற்குழு கூடி இது குறித்து முடிவெடுக்கும்’ என்று கூறினேன். மீண்டும் இன்றைக்கு அதே கேள்வியைக் கேட்கிறீர்கள். நீங்கள் அவசரமாக கேட்கும் இந்த கேள்விக்கு, நான் அவசரமாகப் பதில் சொல்ல முடியாது. இது கொள்கை ரீதியான விஷயம். இதில் நான் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது. செயற்குழு முடிவெடுக்கும்” என்றார்.

TAGS: