இலங்கைக்கு எதிராக வாக்களிக்கத் தயார் : இந்தியப் பிரதமர்

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்மொழிந்துள்ள தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கக் தயார் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தீர்மானத்தின் இறுதி வடிவம் இன்னமும் இந்தியாவுக்கு கிடைக்கப்பெறவில்லை என்று கூறியுள்ள மன்மோகன் சிங், இலங்கையிலுள்ள தமிழர்களின் எதிர்கால நலன்களை அந்தத் தீர்மானம் பிரதிபலிக்குமாயின் அத்தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க தயாராகவுள்ளது என்று கூறினார்.

சமத்துவத்துடன் கூடிய கண்ணியமான ஓர் எதிர்காலம் இலங்கைத் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டும் என்னும் இந்திய இலட்சியங்களை அமெரிக்கத் தீர்மானம் சாதிக்குமானால் அதற்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்க சித்தமாக இருப்பதாக தெரிவித்திருக்கும் மன்மோகன் சிங், இலங்கையில் தமிழர்களுக்கு நீதியும் சுயகௌரவமும் கிடைக்க வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய அரசு இலங்கை தமிழர்களின் நலன்களுக்கு அதிக முக்கியத்துவத்தை அளித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றும் போதே இந்தியப் பிரதமர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

பிரதமரின் இந்த அறிவிப்பை ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக உட்பட பலர் வரவேற்றுள்ளனர்

TAGS: