மனித உரிமை ஆர்வலர்களின் கைகால்களை உடைப்பேன்: இலங்கை அமைச்சர்

இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்துக்கு ஆதரவாகச் செயல்பட்ட இலங்கையின் மனித உரிமை ஆர்வலர்களின் கைகால்களை உடைப்பேன் என்று மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மெர்வின் சில்வா தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தற்போது பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது.

இலங்கைக்கு எதிரான ஐநா மனித உரிமை ஆணையத்தின் தீர்மானத்திற்கு ஆதரவாக குரல்கொடுக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் இலங்கை அரசை விமர்சிப்பதாக அரசு கருதும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் குறித்து இலங்கை அரசும், அரச கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடக நிறுவனங்களும் செய்து வரும் எதிர்ப்பு பிரச்சாரம் கடந்த சில வாரங்களாக தீவிரப்பட்டுவருகிறது.

தலைநகர் கொழும்பை ஒட்டிய அவரது தொகுதியில் இலங்கைக்கு எதிராக ஐ.நா மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மெர்வின் சில்வா, இலங்கையின் மனித உரிமை ஆர்வலர்கள் சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு இவர்களின் கைகால்களை உடைப்பேன் என்று எச்சரித்திருந்தார்.

சுனந்த தேசப்பிரிய, நிமால் பெர்னாண்டோ, பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோரைப் பெயர் குறிப்பிட்டுச் சொல்லி அவர் இந்த அச்சுறுத்தலை விடுத்தார்.

மனித உரிமை விவகாரத்தில் இலங்கைக்கு எதிராகக் குரல் கொடுத்திருந்த பத்திரிகையாளர் பொத்தள ஜயந்தவை இலங்கையை விட்டு தானே விரட்டியடித்ததாகவும் மெர்வின் சில்வா கூறியுள்ளார்.

மெர்வின் சில்வாவின் இந்த உரை, அரசும் நிர்வாகமும் எந்த அளவுக்கு கேவலமானதொரு நிலைமையை, கீழ்மையை அடைந்திருக்கின்றன என்பதையே காட்டுவதாக மனித உரிமை ஆர்வலர் பாக்கியசோதி சரவணமுத்து பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

தங்களை பயமுறுத்துவதறாக விடுக்கப்படும் அச்சுறுத்தல்களையும் அரசாங்கம் மேற்கொள்ளூம் தவறான பிரச்சாரங்களையும் கண்டு தாங்கள் துவண்டுவிடப் போவதில்லை. நாட்டின் மீது தங்களுக்கு இருக்கின்ற அக்கறையும் தாங்கள் ஆற்றிவருகின்ற பணிகளும் தொடரவே செய்யும் என பாக்கியசோதி குறிப்பிட்டார்.

இதற்கிடையே, இலங்கை அமைச்சர் மெர்வின் சில்வா தெரிவித்திருக்கும் கருத்துகள் தொடர்பில் காவல்துறை விசாரணை நடத்தும் என்று இலங்கை காவல்துறையின் பேச்சாளர் அஜித் ரோஹன பிபிசியிடம் தெரிவித்தார்.

மேலும் தேச துரோகிகள் என்று சில குறிப்பிட்ட நபர்களை குறிவைத்து நடத்தப்படும் பிரச்சாரத்தை இலங்கை அரச தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டதாக இலங்கை அரசின் ஊடகத்துறை அமைச்சர் நேற்று வியாழக்கிழமை தெரிவித்திருந்தார். ஆனாலும் அந்த ஒலி/ஒளிபரப்புக்கள் வெள்ளிக்கிழமையும் தொடர்ந்திருந்தன.

-BBC

TAGS: