ஐ.நா. தீர்மானம் குறித்து இலங்கை அரசு காட்டம்

இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், பிரச்னை அடிப்படையில் இல்லாமல், சில நாடுகளுக்கிடையிலான முக்கியத்துவம் வாய்ந்த உறவுகள் மற்றும் உள்நாட்டு அரசியல் பிரச்னைகள் அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ளது என இலங்கையின் தாற்காலிக வெளியுறவு அமைச்சர் டியு குணசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமை ஆணையத்தில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக, இலங்கை அரசின் நிலைப்பாட்டை விளக்கி இலங்கை நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை அமைச்சர் குணசேகர தாக்கல் செய்தார்.

ஐநா மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், தெரிந்தோ தெரியாமலோ, இலங்கை அரசு எடுத்து வரும் அமைதி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளை சீர்குலைக்கும் தீவிரவாதிகளின் திட்டங்களுக்கு துணைபோவதாக இருக்கிறது என்று கூறிய அமைச்சர், “ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எதுவாக இருந்தாலும், தீவிரவாதிகளின் கையில் இந்த நாட்டை மீண்டும் விட்டுவிட மாட்டோம்” எனக் குறிப்பிட்டார்.

நியாயமற்ற, தேவையற்ற வகையில் இலங்கையின் உள்விவகாரங்களில் சில நாடுகள் தலையிடுவதாக அமைச்சர் குற்றம் சாட்டினார். ஐ.நா. மன்ற தீர்மானத்தில் இலங்கை அரசின் ஒரு நியாயமான நடவடிக்கைகூட அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை என்று அவர் கவலை வெளியிட்டார்.

ஐ.நா தீர்மானம், ஒரு நாட்டில் பிரச்னை வரும்போது உள்நாட்டு வழிமுறைகள் மூலம் தீர்வு காண அனுமதிக்கப்பட வேண்டும் என்ற அனைத்துலக நடைமுறைகளை மீறிவிட்டதாக குற்றம் சாட்டினார்.

இலங்கை எப்போதுமே உலக நாடுகளுடன் ஆலோசனை நடத்தி செயல்படத் தயாராக இருப்பதாகவும், அதே நேரத்தில், அநியாயமான கோரிக்கைகளுக்கு நாடு எப்போதும் அடிபணியாது என்றும் அமைச்சர் டியு குணசேகர உறுதிபடத் தெரிவித்தார்.

அந்த வகையில், இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார். அதே நேரத்தில், அரசியல் நிர்பந்தங்களால் இந்தியா தங்களுக்கு எதிராக வாக்களித்திருப்பதாக மறைமுகமாக அவர் சுட்டிக்காட்டினார்.

TAGS: