அனைத்துலகத்தின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டேன் என்கிறார் மகிந்தா

ஜெனீவா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கைக்கு தோல்வி ஏற்பட்டு விட்டதாக, விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால் இனி எந்த ஒரு சூழ்நிலையிலும் பயங்கரவாத மிரட்டலுக்கு அடிபணிய இடம் தர மாட்டோம் என இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்தா ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

பயங்கர வாதத்தை முழுமையாக ஒழித்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தி, வளர்ச்சியை நோக்கி செல்கிறோம். இந்த வேளையில் நாட்டுக்கு எதிரான நெருக்கடியை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. சில சக்திகள் இலங்கைக்கு எதிராக அவதூறுகளை கிளப்பி வருகின்றன. சர்வதேச தமிழர் அமைப்புகள், விடுதலைபுலிகளின் ஆதரவாளர்கள் குறுகிய நோக்கத்துடன் அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்பட்டனர்.

ஐ.நா. தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது 15 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன. மேலும் 8 நாடுகள் இலங்கையின் திட்ட பணிகளை ஏற்றுக் கொண்டுள்ளன. எதிர்த்து வாக்களித்த நாடுகள் உள்நாட்டு நெருக்கடி காரணமாகவே அப்படி நடந்து கொண்டன.

இலங்கைக்கு வாக்களிக்காத நாடுகளுக்கு (இந்தியா) ஒன்றை ஞாபகப்படுத்துகிறேன். பயங்கரவாதிகளால் ஏற்படும் பாதிப்புகளை அவர்களும் அனுபவிக்க வேண்டியது இருக்கும் என்பதை மறந்து விடக் கூடாது, இது அவர்களுக்கு பின்னர் புரியும். இலங்கை சுயமாக செயல்படும். இங்கு தேவையில்லாமல் நெருக்கடி கொடுக்க யாருக்கும் இடம் தர மாட்டோம் என ராஜபக்சே ஆணவத்துடன் கூறினார்.

TAGS: