இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தீர்மானம் ஒன்று உகண்டாவி்ல் நடைபெறவுள்ள அனைத்துலக நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு அமர்வுகளின்போது நிறைவேற்றப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இம் மாதம் 30ம் தேதி தொடக்கம், ஏப்ரல் 6ம் திகதி வரை அனைத்துலக நடாளுமன்றக் குழு அமர்வுகள் உகண்டாவின் கம்பலா நகரில் நடைபெறவுள்ளது.
இந்த அமர்வுகளின்போது சிறீலங்காவிலுள்ள எதிர்க்கட்சிகளால் ராஜபக்சே தலைமையிலான சிறீலங்கா அரசுக்கு எதிராக தீர்மானம் ஒன்று முன்வைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை நாடாளுமன்றத்தில் ஜயலத் ஜயவர்த்தன மீது நடத்தப்பட்ட தாக்குதல், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டமை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராகவிருந்த ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட மேலும் பல குற்றச்சாட்டுக்கள் இலங்கை அரசாங்கத்திற்கெதிராக அந்தத் தீர்மானத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.