இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றுள்ளது. அக்குழு தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு சென்று பார்வையிட்டது.
இந்நிலையில், குழுவின் தலைவர் சுஷ்மா சுவராஜுக்கு இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்தா ராஜபக்சே நேற்று சிறப்பு விருந்து அளித்தார். மற்ற எம்.பி.க்கள் இதில் கலந்து கொள்ளவில்லை.
சுஷ்மாவின் மகள் பன்சூரி சுவராஜ் மட்டுமே பங்கேற்றார். ராஜபக்சேவும், சுஷ்மா சுவராஜும் சாப்பிட்டபடியே உரையாடினர். சக எம்.பி.க்களை தவிர்த்து விட்டு, சுஷ்மா மட்டும் போய் ராஜபக்சேவை சந்தித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஒருவேளை, மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் சுஷ்மா மட்டும் தனியாக போயிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்திய எம்.பி.க்கள் இன்று காலை அதிபர் ராஜபக்சேவுடன் காலை உணவு சாப்பிட்டபடியே பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தது. ஆனால், ராஜபக்சேவுடன் விருந்து சாப்பிட்டால், தமிழ்நாட்டில் கெட்ட பெயர் ஏற்படும் என்று அஞ்சிய இந்திய எம்.பி.க்கள், அந்த சந்திப்பை ரத்து செய்யுமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டனர்.
அதன்படி, அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே, சுஷ்மா சுவராஜ் நேற்று மட்டக்களப்பு சென்றார். அங்குள்ள மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தை தேசிய தொழில் கல்லூரியாக தரமுயர்த்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.