தம்புள்ளவில் பள்ளிவாசல் மீது தாக்குதல்: பௌத்த துறவிகள் எச்சரிக்கை

இலங்கையின் தம்புள்ளவிலுள்ள பள்ளிவாசல் மீது நேற்று குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த பள்ளிவாசலை மூடிவிடும்படி அந்தப் பிரதேசத்தில் செயற்படும் பௌத்த துறவிகளை பிரதிநிதிக்கும் அமைப்பு எச்சரித்திருந்த நிலையிலேயே இக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்களை அகற்றுமாறு பௌத்த பிக்குகள் தம்புள்ளவில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தம்புள்ள புனிதப் பகுதி அபிவிருத்திப் பணிகள் கைவிடப்பட்டமை மற்றும் வேற்று மத வழிபாட்டுத் தளங்கள் அமைக்கப்படுதல் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை பள்ளிவாசலில் தொழுகை நடைபெற்ற சந்தர்ப்பத்தில் பௌத்த துறவிகள் அத்துமீறி பிரவேசித்து சென்று எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

முஸ்லிம் பள்ளிவாசலை அகற்றும் வரையில் போராட்டத்தைத் தொடரப் போவதாக பௌத்த துறவிகள் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்த முஸ்லிம் பள்ளிவாசல் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக தம்புள்ள பிரதேச செயலாளர் லக்ஸ்மி செவிரட்ன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 23-ஆம் தேதி பள்ளிவாசல் கட்டிடத்தை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என பிரதேச செயலாளர் வாக்குறுதி அளித்துள்ளார். இந்த வாக்குறுதியை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றுள்ளனர்.

TAGS: