தமிழ் ஈழம் கிடைக்க காந்தி வழியில் போராடப் போகிறாராம்!

தனி தமிழ் ஈழம் கிடைக்க காந்தி வழியில் போராடுவேன் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார். சட்டசபையில் ஜனநாயகம் படும் பாடு என்ற தலைப்பில் மக்களை சந்திக்கும் வகையில் வடசென்னை தி.மு.க., சார்பில் பெரவள்ளூரில் பொதுக் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது: சட்டசபையில் எதிர்கட்சிகளை அடக்கும் நடவடிக்கையை போலவே தி.மு.க.,வை அடக்கி விட முடியும், அதன் குரல் வளையை நெருக்கி விட முடியும் என்று எண்ணியவர்களுக்கு இந்த கூட்டத்தின் மூலமும், இனியும் மாவட்டந்தோறும் நடக்கும் பல கூட்டங்களின் மூலமும் தி.மு.க.,வினர் பதில் அளிப்பர்.

பதவியும், பட்டமும், கிரீடமும் உங்கள் கால் செருப்புக்கு ஈடாகுமா? நாளைக்கும் சிறைச்சாலை சென்றால் கூட அதை தவ சாலையாக ஏற்றுக்கொள்வோம். 90 வயதை நெருங்கி விட்டேன் அதன் பிறகு வாழ வேண்டியது உருவமாக அல்ல. பெரியார், அண்ணா போன்று உங்கள் மனதில் வாழ்வேன். தி.மு.க.,விற்கு சக்தி, மன திடம் உள்ளது. தமிழர்களை ஒன்றுபடுத்த தான் இக்கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

நான் தமிழுக்காக குரல் கொடுத்து கொண்டே இருப்பேன். தனி தமிழ் ஈழத்தை உருவாக்கி விட்டு தான் இவ்வுலகை விட்டு செல்வேன். அதற்காக அண்ணா, காந்தி வழியில் அறப்போராட்டம் நடத்தி தமிழ் ஈழம் கிடைக்க போராடுவேன்.

தனி ஈழம் அமைக்க டெசோ இயக்கத்தை மீண்டும் தொடங்க வேண்டும். அவ்வியக்கம், தி.மு.க.,வின் துணை இயக்கமாக செயலாற்றி தனி தமிழ் ஈழம் உருவாக பாடுபடும். இவ்வாறு கருணாநிதி பேசினார். இக்கூட்டத்தில், கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.