அரசியல் தீர்வு காண வலியுறுத்துவதோடு மட்டுமல்லாமல், கூடுதல் அதிகாரங்களையும் பெற்றுத்தர வேண்டும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சுஷ்மா தலைமையிலான நாடாளுமன்ற குழு வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், இலங்கை அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் நிலவும் முட்டுக்கட்டையை நீக்க வேண்டும். தமிழர் தாயகத்தில் இராணுவ ஆக்கிரமிப்பை அகற்றி, அந்தப் பகுதிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட, இந்தியாவில் இருந்து நிபுணர்களை அனுப்ப வேண்டும்” என, பிரதமரிடம் சுஷ்மா தலைமையிலான குழு மேலும் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் போருக்கு பின், புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியா சார்பில், 500 கோடி இந்திய ரூபாய் வழங்கப்பட்டது. இந்த நிதியைக் கொண்டு, அங்கு தமிழ் பகுதிகளில் வீடு கட்டித் தரும் பணிகள் நடந்து வருகின்றன.
இவற்றை பார்வையிடவும், தமிழர்களின் நிலைமை குறித்தும் நேரில் பார்த்து ஆராய்ந்து வரவும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் அனைத்துக் கட்சி குழு இலங்கை சென்றது. அ.தி.மு.க., தி.மு.க., ஆகிய முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் இல்லாமலேயே இலங்கை சென்று விட்டு இந்தக் குழு திரும்பியது என்பது குறிப்பிடத்தக்கது.