இலங்கை திருகோணமலையில் அமைந்துள்ள பிள்ளையார் கோவிலை அகற்ற இலங்கை அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதைக் கண்டித்து, சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் அருகே நேற்று மாலை முற்றுகை போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இப்போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சேவின் உருவபொம்மையுடன் முச்சக்கரவண்டியும் தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருகோணமலையில் பிள்ளையார் கோவிலை இடிக்க, சிங்கள அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதைக் கண்டித்து, இந்து முன்னணி சார்பில் இப்போராட்டம் நடந்தது.
கட்சியின் மாநில பொருளாளர் காஞ்சி கண்ணன் தலைமையில், இலங்கை அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியவாறு, டிடிகே சாலையில் இருந்து இலங்கைத் தூதரகத்தை நோக்கி இந்து முன்னணியினர் சென்றனர்.
பாதுகாப்பு நின்றிருந்த தேனாம்பேட்டை காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அப்போது மகிந்த ராஜபக்சேவின் கொடும்பாவியை அவர்கள் எரிக்க முயன்றபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
முச்சக்கர வண்டியொன்றில் வந்த இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர், ராஜபக்சவின் உருவ பொம்மையை எரிக்க விடாமல், காவல்துறையினர் தடுப்பதை பார்த்து விட்டு, முச்சக்கர வண்டிக்குள் வைத்து ராஜபக்ச உருவபொம்மைக்கு பெட்ரோல் ஊற்றினார்.
சற்றுதூரம் சென்றதும் அதற்கு தீ வைத்து விட்டு, இலங்கைத் தூதரகம் அருகே சென்றதும், உருவபொம்மையை வீச முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக முச்சக்கரவண்டியில் தீப்பிடித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சாரதி தப்பி ஓடிவிட்டார். உருவபொம்மையை எடுத்து வந்தவர் இடது கையில் தீக்காயத்துடன் கீழே குதித்தார். பின்னர் தீயணைப்புப் படையினர் வந்து தீயை அணைத்தனர். எனினும் முச்சக்கரவண்டி முழுவதும் எரிந்து நாசமானது.
இதையடுத்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை காவல்துறையினர் கைது செய்து, தேனாம்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் இவர்கள் மாலையில் விடுக்கப்பட்டனர்.