மகிந்தாவின் அராஜக செயல்களை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்: பா. அரியநேத்திரன்

இலங்கையில் என்றுமில்லாதவாறு பொருள்களின் விலைகளைத் தொடர்ச்சியாக அதிகரித்து, மக்களைப் பட்டினியால் வதைக்கின்றது மகிந்தா ராஜபக்சே தலைமையிலான அரசு. வாழ வழியின்றித் திண்டாடும் மக்கள் மரணத்தின் வாசலில் நிற்கின்றனர் என்று தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.

பால்மா, சமையல் எரிவாயு மற்றும் சிமேன்டு ஆகியவற்றின் விலைகளை இலங்கை அரசு திடீரென அதிகரித்தமை தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எரிபொருள்களின் விலையை அதிகரித்து, பின்னர் கோதுமை மாவின் விலையை அதிகரித்த அரசு, மூன்று பொருள்களின் விலைகளைத் திடீரென அதிகரித்துள்ளது. உழைக்கும் தொழிலாளர் தினமான மேதினம் அனுஷ்டிக்கப்பட்டு நான்கு தினங்களின் பின்னர் நாட்டில் மூன்று பொருள்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

இதிலிருந்து தொழிலாளர்களை எவ்வாறு இந்த அரசு துன்புறுத்துகின்றது என்பது தெட்டத் தெளிவாகின்றது. வெளிநாடுகளுக்கு குடும்ப சகிதம் உல்லாசமாகப் பயணங்களை மேற்கொள்ளும் மகிந்தா அரசு பொருள்களின் விலைகளைத் தொடர்ச்சியாக அதிகரித்து நாட்டு மக்களின் வயிற்றில் அடிக்கின்றது.

மகிந்தா அரசின் இந்தப் படுமோசமான செயல்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது. இந்த அரசின் நடவடிக்கைகளை இனியாவது சிங்கள சகோதரர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். நாட்டில் மூவின மக்களும் அணிதிரண்டு மஹிந்தா அரசின் அராஜகச் செயல்களை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.

குறிப்பாக சிங்கள மக்கள் வீதிகளில் இறங்கி பொருள்களின் விலையேற்றத்திற்கெதிராகத் தொடர் ஆர்பாட்டங்களை நடத்த வேண்டும். அப்போதுதான் மஹிந்த அரசு கதிகலங்கும். குடும்ப ஆட்சியும் முடிவுக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.

TAGS: