போர் குற்றங்கள் குறித்து நாங்களே விசாரிப்போம்; இலங்கை அரசு அறிவிப்பு

இலங்கையில் விடுதலை புலிகளுடன் நடந்த இறுதிகட்டப் போரில் இராணுவத்தினரின் அத்துமீறல்கள் குறித்து நாங்களே விசாரிப்போம். அனைத்துலக நீதிமன்ற விசாரணையை ஏற்க முடியாது என்று அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஜி.எம்.பெய்ரிஸ் நேற்று கூறினார்.

இலங்கையில் விடுதலை புலிகளுடன் நடந்த இறுதிகட்டப் போரில் தமிழர்கள் மீது அந்நாட்டு இராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. இதில் பல ஆயிரம் அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இராணுவத்தினரின் அத்துமீறல்களால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த போர் குற்றங்கள் குறித்து அனைத்துலக நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டுமென பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக, இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட ஐ.நா. தீர்மானமும் நிறைவேறியது.

இந்நிலையில், இலங்கையின் வெளியுறவு துறை அமைச்சர் ஜி.எம்.பெய்ரிஸ் தலைமையில் ஒரு குழுவினர் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் நேற்று அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை சந்தித்து பேசினர். அப்போது, இலங்கையில் தமிழர்களின் மறுவாழ்வுக்காக எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் போர் குற்றங்கள் குறித்த விசாரணை பற்றிய அறிக்கையை அளித்தனர்.

“இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து அட்டர்ஜி ஜெனரல் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இது பற்றி அனைத்துலக நீதிமன்ற விசாரணையை ஏற்க முடியாது. எங்கள் விசாரணையில் இராணுவத்தினரின் அத்துமீறல்கள் குறித்தும் விசாரிக்கப்படும். அதன் முடிவு தெரியும் வரை அனைத்துலக அமைப்புகள் தலையிடக் கூடாது என பெய்ரிஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

TAGS: