இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவின் அரசியல் உரிமையைக் காக்க எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்துள்ளன. குடியரசுத் ராஜபக்சேவின் உத்தரவின் பேரில் திங்கள்கிழமை சரத் பொன்சேகா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலையானபோதும் அடுத்த 7 ஆண்டுகளுக்கு குடியரசுத் தலைவர் அல்லது நாடாளுமன்றத் தேர்தலில் அவரால் போட்டியிடவோ, வாக்களிக்கவோ முடியாது.
பொன்சேகாவின் அரசியல் உரிமை பறிக்கப்பட்டுள்ளதால் எதிர்க்கட்சிகள் கோபமடைந்துள்ளன. 2010 ஜனவரியில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பொன்சேகா களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 2010 பிப்ரவரியில் பொன்சேகா கைது செய்யப்பட்டதிலிருந்து அவரை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வந்தன.
குடியரசுத் தலைவர் ராஜபட்சவின் உத்தரவு குறித்து பேசிய நீதித் துறை அமைச்சர் ரெற்ஃப் ஹக்கீம், “பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்ட சிறைத் தண்டனையைக் குறைத்து மட்டுமே அதிபர் உத்தரவிட்டார். அவரது தண்டனையை அதிபர் ரத்து செய்துவிடவில்லை. அவருக்கு வழங்கப்பட்டது முழுமையான மன்னிப்பு அல்ல. எனவே பொன்சேகா இப்போதும் நீதிமன்ற தண்டனையைப் பெற்ற மனிதன்தான். ஆகையால் அரசியலமைப்பு விதிக்கும் அரசியல் தகுதியிழப்பு அவருக்கு பொருந்தும்” என்றும் அவர் விளக்கமளித்தார்.
அரசியலமைப்பு சட்டம்-89 இலங்கை அரசியலமைப்பு சட்டம் 89-ன் படி, “குறைந்தபட்சம் 2 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட தகுதியுள்ள குற்றத்தின் கீழ், தீர்ப்பு வழங்கப்பட்டபின், ஒருவர் 6 மாதம் சிறையிலிருந்தாலே, அவர் குடியரசுத் தலைவர் அல்லது நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கவோ, போட்டியிடவோ 7 ஆண்டுகளுக்கு தடை’ விதிக்கப்படுகிறது. பொன்சேகாவின் விஷயத்தில் இந்தச் சட்டம் கனக்கச்சிதமாக பொருந்துகிறது.
எதிர்க்கட்சிகள் குரல்… பொன்சேகாவின் நிலை குறித்துப் பேசிய ஐக்கிய தேசியக் கட்சியின் (யு.என்.பி.) முக்கிய தலைவர் சஜித் பிரேமதாசா, “அவருக்கு அரசு முழு சுதந்திரம் வழங்காதது இழிவான செயலாகும். அவர் தனது அரசியல் உரிமைகளை திரும்பப் பெறும் வகையில் மக்கள் கருத்தை உருவாக்க நாங்கள் பிரசாரம் மேற்கொள்வோம்’ என்றார்.
“பொன்சேகா காவலில் இருக்கும்போதே இறந்துவிடுவாரோ என்று அரசு பயந்தது. விடுதலை செய்யப்படும்போது அவர் மருத்துவமனையில் இருந்தார். அவர் காவலில் இருக்கும்போதே இறந்தால் நாடுதழுவிய அரசியல் போராட்டம் வெடிக்கும் என்று அரசு அஞ்சியது. அதே நேரத்தில் ஒரு அரசியல் அச்சுறுத்தலாக பொன்சேகா உருவெடுக்கக் கூடாது என்பதையும் உறுதி செய்து கொள்ள அரசு திட்டமிட்டது. அதன்படி நிபந்தனையுடன் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்’ என்று யு.என்.பி.யின் எம்.பி. ஆர்.யோகராஜன் தெரிவித்தார்.
“பொன்சேகாவின் விடுதலைக்காக பேச்சு நடத்தியவர்களுக்கு அறிவுரை வழங்கிய வழக்குரைஞர்கள் இதை கவனிக்கத் தவறிவிட்டனர்” என்று யு.என்.பி.யின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
“அவரது அரசியல் உரிமையை நிலைநாட்டுவதே எங்களது அடுத்த கட்ட இலக்கு’ என்று பொன்சேகாவின் சொந்தக் கட்சியான ஜனநாயக தேசிய கூட்டணியின் எம்.பி. திரன் அலேஸ் தெரிவித்தார். பொன்சேகாவின் அரசியல் எதிர்காலத்துக்காக போராடுவோம் என்று ஜனதா விமுக்தி பெரமுணா அறிவித்துள்ளது.
“ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி அவசியம்”
இலங்கையில் ராஜபக்சே அரசின் ஊழலை எதிர்த்துப் போராடும் வகையில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கப் பாடுபடப் போவதாக ஃபொன்சேகா தெரிவித்தார்.
கொழும்பு நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வலுவான எதிர்க்கட்சியே உடனடித் தேவை. பொதுவான எதிர்க்கட்சியை உருவாக்குவதற்கு நாம் பணியாற்ற வேண்டும். ஒருங்கிணைந்த பிறகு அதன் தலைமையைப் பற்றி முடிவு செய்து கொள்ளலாம்” என்றார்.
“நாட்டில் ஊழல் அரசியல்வாதிகள் நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் கொள்ளையடிப்பதுடன் அரசியல் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர். இதைச் சரிப்படுத்தும் வகையில் மக்களின் நலனுக்காக உழைக்கும் அரசியல் கலாசாரத்தை உருவாக்க நாங்கள் பாடுபடுவோம்” என்றார்.