நீண்டகாலமாக வழக்கு விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் நடைபெற்ற ஒரு நாள் அடையாள உண்ணாநோன்பில் தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் புளொட், தமிழர் விடுதலைக்கூட்டணி, ஜனநாய மக்கள் முன்னணி, பிரஜைகள் குழு ஆகிய தமிழ் அமைப்புக்களின் தலைவர்களும், ஜேவிபியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
சிறையில் உண்ணாநோன்பு இருப்பவர்களின் உறவினர்கள், கைது செய்து அல்லது சரணடைந்த பின்னர் காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்களும், இந்த உண்ணாநோன்பில் கலந்து கொண்டனர்.
ஒரு மாத காலத்தில் அரசியல் கைதிகளின் விவகாரத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ள போதிலும், இத்தகைய வாக்குறுதிகள் ஏற்கனவே வழங்கப்பட்டும், அவைகள் நிறைவேற்றப்படாதிருக்கின்றன என்றும் அத்தகைய ஒரு வாக்குறுதியாகவே அரசாங்கத்தின் இந்த வாக்குறுதியையும் தாங்கள் பார்ப்பதாக இந்த உண்ணாநோன்பில் கலந்து கொண்ட அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் தெரிவித்தனர்.
அரசாங்கத்தின் பொய்யான வாக்குறுதிகளைத் தொடர்ந்தும் நம்புவதற்குத் தாங்கள் தயாரில்லை என தெரிவித்துள்ள அவர்கள், இலங்கை அரசாங்கத்திடம் இருந்து நேர்மையான நடைமுறைச் செயற்பாட்டையே தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் கூறிகின்றனர்.