போர்க்குற்றவாளி மகிந்தா ராஜபக்சேவை தங்களின் விருந்தினராக, அரச மாளிகையில் கால்பதிக்க விடாதீர்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி. உருத்திரகுமாரன், பிரிட்டிஷ் மாகாராணியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரிட்டிஷ் மகாராணியாரின் அழைப்பினை ஏற்று, லண்டனுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்தா ராஜபக்சேவின் பயணம் குறித்து, பிரிட்டிஷ் மாகாராணியாருக்கு அனுப்பி வைத்துள்ள கடித்திலேயே பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இக்கோரிக்கையினை விடுத்துள்ளார்.
தங்களின் வைரவிழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதன் வழியே, இரத்தம் தோய்ந்த, தனது அனைத்துலக போர்குற்றங்களை, மூடிமறைக்க மகிந்த ராஜபக்சேவிற்கு வாய்ப்பளிப்பதோடு, இத்தகைய குற்றவாளிகள், எதுவித அச்சமின்றி உலகத் தலைவர்கள் முன் தோன்றுவதற்கு, ஊக்குவிப்பதாக அமைகின்றதென என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் அங்கத்துவ நாடொன்றின் தலைவர் என்ற அடிப்படையில், சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவிற்கான அழைப்பாக இருந்தாலும், அவருக்கான அழைப்பினை மீளப் பெறுமாறு வேண்டுகிறோம்.
ஏனெனில், ஐ.நா பொதுச் செயலர் பான் கீ முன் அவர்களினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில், தமிழ் மக்களுக்கு எதிரான போர் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியனவற்றுக்கான நம்பந்தகுந்த ஆதாரங்கள் கண்டறிப்பட்டுள்ளது.
அத்தோடு Amnesty International, Human Rights Watch and International Crisis Group , UK Channel 4 ஆகிய நிறுவனங்கள் இனப்படுகொலையின் சான்றுகளை வெளிக்கொணர்ந்துள்ளன என, TGTE பிரதமர் வி. உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
1958-ஆம் ஆண்டு முதல் தமிழர்கள் பல தடவைகள் பெருமளவில் படுகொலை செயப் பட்டு வந்துள்ளதை குறித்து குறிப்பிட்டுள்ளதுடன், ஐ. நா நிபுணர் குழுவின் அறிக்கையில், 2009 ஆண்டில் ஐந்து மாதங்களில் மட்டும் 40,000 மேல்பட்ட தமிழ் மக்கள் இலங்கையில் படுகொலை செயப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதையும் உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தினால், பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப் பட்ட பிரதேசங்கள் மீது, வேண்டுமென்றே கொள்ளப்பட்ட பரவலான தாக்குதல்களினால் இப்பாரிய அளவிலான இறப்புக்கள் நிகழ்ந்தன எனவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கம் தமிழகளுக்கு உணவு, மருந்து என்பன கிடைக்காமல் தடை செய்தது. அதனால் பலர் பட்டினியால் இறந்தனர். இன்னும் பலர் இரத்தம் வெளியேறியதனாலும் இறந்தனர்.
சிறிலங்கா படையினரால் பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதோடு 90 ஆயிரம் பெண்கள் கணவர்களை இழந்தவர்களாக உள்ளனர். இது குறித்து பிரித்தானிய அரசாங்கமும் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் சிறிலங்காவின் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்கள் பலர் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகின்றனர்.
2009ம் ஆண்டு இறுதி போரில் 1 , 46679 பேரின் நிலை குறித்து மன்னார் ஆயர் இராஜப்பு ஜோசப்பு அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளார்.
சிறிலங்காவின் ஆயுதப் படையில் உள்ளவர்கள் ஏறத்தாழ அனைவரும் சிங்கள இனத்தவர்கள். அதே வேளையில், கொடுமைகளுக்கு உள்ளாக்கப் படுபவர்கள் அனைவரும் தமிழ் இனத்தவர்கள்
இந்நிலையில், ஒரு இனப்படுகொலையாளியை, தங்களின் விருந்தினராக அரச மாளிகையில் கால்பதிக்க விடாதீர்கள் என, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், பிரிட்டிஷ் மாகாராணியருக்கு அனுப்பி வைத்துள்ள கடித்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.