இலங்கை அரசால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக் குழுவின் முன்பாக சாட்சியமளித்த பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் கலந்துரையாடுவதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கைப் பயணத்துக்கு முன்பதாக உண்மை கண்டறியும் குழுவொன்றை அனுப்புவதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
இது தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் உயர் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. முறைப்படியான இந்த வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் நிராகரித்தால், மூன்றாவது தரப்பின் ஊடாக இந்தக் கலந்துரையாடல்கள் நடத்தப்படக் கூடும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால் இந்த வேண்டுகோள், நவநீதம்பிள்ளையின் இலங்கை பயணத்துக்கு முன்னதாக உண்மை கண்டறியும் குழுவை அனுமதிக்க விடுக்கப்பட்ட வேண்டுகோள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால், இந்த நேர்முகத்துக்கு முறைப்படியான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.
போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த போராளிகள் காணாமற்போனதாக நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் இதுதொடர்பாக சாட்சியமளித்தோரிடம் விரிவாக கலந்துரையாடவுள்ளதாக நம்பப்படுவதாகவும், அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.