புலிகள் இருந்திருந்தால் நடக்குமா இப்படி? மகளைத் தொலைத்த தந்தையின் குமுறல்!

கடந்த 3 மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் காணாமல் போன தனது 18 வயது இளம் பெண்ணைத் தேடிக் களைத்து சோர்வடைந்த நிலையில் தந்தை ஒருவர் ஊடகங்களுக்குத் தனது உள்ளக் குமுறலைத் தெரிவித்துள்ளார்.

இறுதிப் போரில் தனது மனைவியையும் மூத்த மகளையும் இழந்த நிலையில் தனது இரண்டாவது மகளான யோகேஸ்வரன் சர்மினியை தெல்லிப்பளையில் உள்ள சிறுவர் இல்லத்தில் சேர்த்துள்ளார். சர்மினி அங்கு தங்கி கல்வி கற்றுவந்துள்ளார். O/L பரீட்சை எழுதிவிட்டு வீட்டுக்கு வந்துள்ள சர்மினி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் பரீட்சை பெறுபேறுகள் வந்த தகவல் அறிந்து மீண்டும் பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளிக்குச் சென்ற சர்மினி மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து சர்மினியின் தந்தை கூறுகையில்…

“எனது மகள் யாழ்ப்பாணம் போய் சேர்ந்து விட்டாளா என அறிவதற்காக தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது கைத்தொலைபேசி செயல் இழந்து காணப்பட்டது. இருப்பினும் தொடர்ச்சியாக தொடர்பு கொண்டு இருந்த போது ஒரு கட்டத்தில் தொலைபேசி அழைப்பில் எனது மகள் அழுதவண்ணம் பதில் தந்தாள்.

“தான் யாழ்ப்பாணம் வந்தபோது தனக்குத் தெரிந்த ஐயா தன்னை தனது வாகனத்தில் ஏற்றி கொண்டு போய் விடுதியில் விடுவதாகக் கூறியபோது அவரை நம்பி தான்  சென்றதாகவும் ஆனால், தற்போது தன்னை அவரும் அவருடன் சேர்ந்தவர்களும் ஒரு இருட்டறையில் அடைத்து வைத்திருப்பதாகவும் அவர்கள் தன்னை சித்திரவதை செய்து விட்டு சென்றுவிட்டார்கள், மீண்டும் வருவார்கள்” எனவும் கதறி அழுதாள்.

“நான் உடனடியாக யாழ்ப்பாணப் காவல் நிலையத்திற்கு சென்று முறையிட்டு இரவு 12 மணிக்கு வெளியே வந்தேன். அன்றிலிருந்து இன்று வரை காவல்துறையினர் எத்தனையோ தடவைகள் என்னை அழைத்து மாறி மாறி விசாரித்தார்களே தவிர எந்தவித பயன்பாடும் கிடைக்கவில்லை.”

“நான் இறுதி போரில் விடுதலைப் புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்தவன். அத்துடன் எனது ஒரு மகளையும் எனது மனைவியையும் இறுதி போரில் பறி கொடுத்தவன். இருந்தும் நான் தற்போது கவலைப்படுவது என்னவெனில் விடுதலைப் புலிகள் இல்லாது போய் விட்டார்களே என்றுதான்.”

விடுதலைப் புலிகள் தமிழர் தாயகத்தை ஆட்சி செய்த காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏதேனும் நடந்ததே கிடையாது. தமிழர்களுக்கு அப்படி ஒரு பாதுகாப்பாக புலிகள் படை இருந்தது. ஏதேனும் தவறு நடந்தால் உடனடியாக விசாரணை செய்து 24 மணிநேரங்களுக்குள்  அனைத்தையும் கண்டுபிடித்துவிடுவார்கள்.

ஆனால், தற்போது மூன்று மாதங்களாகியும் எனது மகளைக் கண்டு பிடிக்க முடியாது இலங்கை காவல்துறையினர் திணறுகின்றார்கள். அத்துடன் உனது மகள் கல்யாணம் பண்ணி எங்காவது இருப்பாள் என்று சாதாரணமாக கூறுகின்றார்கள் என மிகவும் விரக்தியுடனும் வேதனையுடனும் தெரிவித்தார் சர்மினியின் தந்தை யோகேஸ்வரன்.

TAGS: