மகிந்தவிடம் மன்னிப்பா: மறுக்கிறது பிரித்தானியா !

சிறீலங்கா குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே லண்டன் சென்றபோது அங்கு காமன்வெல்த் பொருளாதார மன்றத்தில் அவர் நிகழ்த்தவிருந்த உரை நிறுத்தப்பட்டதற்காக பிரித்தானிய தலைமையமைச்சர் டேவிட் கமரூன் மன்னிப்புக் கோரவில்லை என்று கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவின் உரை நிறுத்தப்பட்டதற்காக டேவிட் கமரூன், மகிந்த ராஜபக்சவைச் சந்தித்தபோது மன்னிப்புக் கோரியதாக சிறீலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க கூறியிருந்தார்.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகப் பேச்சாளர்; “பிரதமர் டேவிட் கமரூன் சிறீலங்கா அதிபரிடம் எந்தவகையிலும் மன்னிப்புக் கோரவில்லை. குறுகிய காலஅவகாசத்தில் உரை நிறுத்தப்பட்டதாக கவலை தெரிவித்தார். இது பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவு அல்ல. இந்த முடிவை எடுத்தது காமன்வெல்த் வர்த்தக மன்றம். அது ஒரு சுதந்திரமான அமைப்பு.

எதிர்ப்புப் போராட்டங்களை நடத்துவதற்கு பிரித்தானிய குடிமக்களுக்கு உள்ள உரிமையை நாம் மதிக்கிறோம். கவனமாக ஆராய்ந்த பின்னரே காமன்வெல்த் வர்த்தக மன்றம் இந்த முடிவை எடுத்தது. நாம் அந்த முடிவை மதிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS: