தங்களுக்காக கைதான போராட்டவாதிகளை விடுவிக்கும்வரை போராடிய ஈழத்தமிழர்கள்!

தமிழகம்: செங்கல்பட்டு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய, தமிழக அமைப்புகள் மற்றும் கட்சிகள் இன்று செங்கல்பட்டு முகாமை சுற்றி முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அதன்போது முற்றுகை போராட்டம் செய்த தோழர்களை காவல் துறை கைது செய்து மண்டபத்தில் அடைத்தது. இந்த தகவலை அறிந்த முகாமில் இருந்த ஈழத் தமிழர்கள், தங்களுக்காக போராட வந்த தமிழ் உணர்வாளர்களை எப்படி காவல் துறை கைது செய்யலாம் என நான்கு பேர்கள் அங்கிருக்கும் பெரிய மரத்தில் ஏறி ஆர்பாட்டம் நடத்தினர்.

“கைதுசெய்யப்பட்ட உணர்வாளர்கள் அனைவரும் விடுவிக்கப்படும் வரை நாங்கள் மரத்தில் இருந்து இறங்க மாட்டோம் என்றும் அவர்களை விடுதலை செய்யாவிடின் மரத்தில் இருந்து ஒவ்வொருவராக குதித்து தங்களை மாய்த்துக் கொள்வோம்” என்று எச்சரித்தனர்.

அங்கிருந்த தமிழ் உணர்வாளர்கள் சிலர் எவ்வளவோ சமாதனப்படுத்தியும் அவர்கள் கீழே இறங்க மறுத்து விட்டனர். பின்பு அரசு அதிகாரிகள் கூறியும் அவர்கள் சமாதானமாகவில்லை. இறுதியில் காவல்துறைக்கு வேறு வழியே இல்லாமல், கைதுசெய்யப்பட்ட அனைவரையும் மாலை ஆறு மணிக்கு விடுதலை செய்தனர்.

விடுதலை செய்யப்பட்டவர்கள் தாங்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டோம் என்று மரத்தில் இருந்த முகாம் தமிழர்களிடம் கூறிய பிறகும், யார் மீதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லையே என்பதையும் உறுதி செய்த பின்பு தான் மரத்தில் இருந்து கீழே இறங்கி போராட்டத்தை கைவிட்டனர் அந்த ஈழத்தமிழர்கள்.

நேற்று காலையில் 11 மணிக்கு மரத்தில் ஏறியவர்கள் மாலை 7 மணிக்கு தான் மரத்திலிருந்து கீழே இறங்கினர். தங்களை விடுவிக்க போராட வந்தவர்கள் எந்தவித பிரச்சனையும் இன்றி விடுதலை ஆகவேண்டும் என்று போராட்டம் நடத்திய ஈழத் தமிழர்களின் மாண்பு அனைவரையும் வியக்க வைத்தது.

TAGS: