தமிழீழ தனி அரசுக்கான விடுதலைப் போராட்ட வரலாற்றில் தடைநீக்கிகளாக தங்களையே அர்ப்பணித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலி போராளி (Black Tigers) களை நினைவு கூறும் முகமாக ஆண்டு தோறும் ஜூலை 5-ஆம் தேதி ‘கரும்புலிகள்’ நாளாக அனுஷ்டிக்கப்பட்டுவருகிறது.
1987-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் நோக்குடன் கடல்வழியாக யாழ். வடமராட்சி பகுதிக்குள் நுழைந்த சிறீ லங்கா இராணுவம் வடமராட்சியின் சில பகுதிகளை கைப்பற்றி நிலைகொண்டிருந்தது.
அதன்பின்னர், நெல்லியடி பள்ளி வளாகத்திற்குள் நிலைகொண்டிருந்த சிறீ லங்கா படையின் ஒரு தொகுதியினர் மீது வெடிமருந்து நிரப்பப்பட்ட லாறி மூலம் கரும்புலி கப்டன் மில்லர் என்ற போராளி தன்னையே கொடையாக்கி தாக்குதல் நடாத்தினார்.
புலிகளின் முதலாவது தற்கொலைத் தாக்குதலான இத் தாக்குதலில் 40-க்கும் அதிகமான சிங்கள படையினர் கொல்லப்பட்டதுடன் முழு சிங்கள இராணுவத்தையுமே கரும்புலிகளின் முதல் வீரச்சாவு திணறடிக்கவைத்தது.
அதன் பின்னர் இத் தாக்குதல் சம்பம் நடந்த நாளான ஜூலை 5 ‘கரும்புலிகள்’ நாளாக அனுஷ்டிக்கப்பட்டு வந்தது.
கப்டன் மில்லரின் தற்கொலைத் தாக்குதலை தொடர்ந்து சிங்கள படைகளுக்கு எதிராக கரும்புலிகளினால் நடாத்தப்பட்ட தாக்குதல்கள் அனைத்தும் தமிழீழ விடுதலைப் போராட்டம் அனைத்துலகத்தின் கவனத்தையும் ஈர்த்து சென்றதுடன் போராட்டத்தின் முக்கிய திருப்பு முனைகளையும் பெற்றுக்கொடுத்தது.
உலகின் பல பாகங்களில் வாழும் தமிழீழ உணர்வாளர்கள் கரும்புலிகள் நாளான நேற்று (ஜூலை 5) நினைவு நிகழ்வுகளை நடாத்தியிருந்தனர். அதன் ஒரு பகுதியாக ‘கரும்புலிகள் நாள்’ நேற்று கோலாலம்பூர் கந்தசுவாமி கோவில் மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
கடந்த 2009- ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழீழத்தில் விடுதலைப் புலிகளின் நிர்வாக கட்டமைப்பே இயங்கி வந்தது என்பது யாவரும் அறிந்தது. அந்த காலக்கட்டத்தில் அங்கு நடைபெற்ற கரும்புலி நாள் நிகழ்வுகளில் கலந்துகொண்ட LTTE தலைவர்கள் மற்றும் கரும்புலிகள் படையின் இதுவரை வெளிவராத சில புகைப்படங்கள் இங்கு இணைப்பட்டுள்ளது.