ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 131 பேர் இலங்கையில் கைது

இலங்கையிலிருந்து சட்ட விரோதமான முறையில் ஆஸ்திரேலியாவிற்கு மீன்பிடி படகுகளில் செல்ல முயன்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சனிக்கிழமை காலை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான நேரத்தில், மேலும் 131 பேர் இலங்கை காவல்துறை மற்றும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கிழக்கு மாகாணத்திலுள்ள கல்குடா கடலோரத்திலிருந்து சுமார் 20 கடல் மைல் தொலைவில் ஆழ்கடல் மீன்பிடி படகொன்றில் பயணம் செய்தவேளை 101 தமிழர்களும் 8 சிங்களவர்களும் என 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய கூறுகின்றார்.

சனிக்கிழமை இரவு கடற்படையினரால் வழிமறித்து கைது செய்யபபட்ட இவர்கள் கல்முனை, வாழைச்சேனை மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என விசாரணையின்போது கண்டறியபபட்டுள்ளதாகக் கூறும் அவர், இந்த நபர்கள் மேலதிக விசாரணைக்காக காவல்துறை விசேட குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடுகின்றார்.

மற்றுமொரு சம்பவத்தில், சிலாபத்தில் தங்கியிருந்தவேளை பயண ஏற்ப்பாட்டளர்கள் நால்வர் உட்பட 22 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை ஊடகப் பேச்சாளரான அஜித் ரோகண தெரிவிக்கின்றார்.

இந்த சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் காவல்துறை பேச்சாளர் கூறுகிறார்.

இலங்கையிலிருந்து சட்ட விரோதமாக ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த மே மாதம் தொடக்கம் இன்று வரை பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 600 பேர் வரை காவல்துறை மற்றும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதிகாரிகளின் தகவல்களின்படி, ஜூலை மாத்தில் மட்டும் சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் சுமார் 250 பேர் இந்த வாரத்தில் கைதுசெய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

TAGS: