தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் எஞ்சியோர் இலங்கைக்கு வெளியே தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர். அவர்களால் நாட்டுக்கு குந்தகம் ஏற்படக் கூடும். எனவே படைவீரர்கள் தொடர்ந்தும் விழிப்புடன் செயற்பட வேண்டும் என இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜ பக்சே தெரிவித்துள்ளார்.
திருகோணமலை சீனன் குடாவிலுள்ள விமானப்படைத் தளத்தில் இடம்பெற்ற பைலட் அதிகாரியாக பயற்சி முடித்து வெளியேறியோருக்கான பட்டம் சூட்டும் நிகழ்வில் கலந்து கொண்டும் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
“30 ஆண்டு கால உள்நாட்டு யுத்தம் முடிபடைந்துள்ள போதிலும், நாட்டில் நிலவி வரும் சமாதானத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது. நாட்டின் சமாதானத்தை உறுதிப்படுத்த படையினர் தொடர்ச்சியாக முயற்சி மேற்கொள்ள வேண்டும்.”
“இலங்கைக்கு வெளியே தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளின் எஞ்சியோர் செயற்பட்டு வருகின்றனர். நாட்டுக்குள்ளும் இவ்வாறு ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபடக் கூடும். எனவே நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தொடர்ச்சியாக முயற்சிக்க வேண்டியது அவசியமானது.” என்றார்.