மட்டக்களப்பில் முஸ்லிம் பள்ளிவாசல் எரிக்கப்பட்டது

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்தில் இருநூறுவில் கிராமத்திலுள்ள மொகிதீன் ஜூம்மா பள்ளிவாசல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை அடையாளம் தெரியாத குழுவொன்றினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது அங்கு அமைக்கப்பட்டிருந்த நான்கு தற்காலிக குடிசைகளும் கடையொன்றும் இக்குழுவினரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்தனர்.

உழவு இயந்திரமொன்றில் வந்த குழுவினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தமது விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறும் காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் உள்ளுர்வாசியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் ஒரு சிலர் தேடப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

1980-ஆம் ஆண்டு இக் கிராமத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள், தமிழ் – முஸ்லிம் இனங்களுக்கிடையிலான வன்முறை காரணமாக வெளியேறியிருந்தனர்.

போர் ஓய்ந்த பின்னர் தமது மீள் குடியேற்றத்திற்காக அங்கு தற்காலிக பள்ளிவாசலொன்றை அமைத்ததோடு தற்காலிக குடிசைகளையும் அமைத்திருந்தனர்.

சம்பவம் தொடர்பாக தகவலறிந்து அங்கு விரைந்த அமைச்சர் ரவுப் ஹக்கீம், பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஆறுதல் கூறினார்.

அந்தப் பகுதியில் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை விரும்பாத சிலரின் நடவடிக்கையாகவே தான் இதனை கருதுவதாக அவர் கூறினார்.

ஏற்கனவே வெளியேறியுள்ள முஸ்லிம்களின் காணிகைளை அபகரித்து அனுபவித்து வரும் அந்த நபர்கள், அதனை மீளக்கையளிக்க வேண்டி நேரிடும் என்ற நோக்கில் இதனை செய்திருக்கலாம் என்றும் யாராகவிருந்தாலும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது காவல்துறையினரின் கடமை என்றும் அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறினார்.

அந்தப் பகுதியில் மீள் குடியேறியுள்ள முஸ்லிம்களின் பாதுகாப்புக் கருதி காவல் நிலையமொன்றை அங்கு அமைப்பதன் அவசியம் பற்றி கிழக்கு மாநில துணை காவல்துறை அதிபரிடம் தான் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

TAGS: