கொழும்பில் டெசோ எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்; கருணாவின் உருவபொம்மை எரிப்பு!

டெசோ மாநாட்டை நடத்துவதற்கு முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதிக்கு அனுமதி வழங்கியதற்காக இந்திய மத்திய அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டம் ஒன்று இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்றது.

இலங்கையின், ”தேசத்தைக் காக்கும் அமைப்பு” என்னும் அமைப்பினரால் இந்த ஆர்ப்பாட்டம், கொழும்பில் உள்ள இந்திய தூதுவரின் அதிகாரபூர்வ இல்லத்தின் முன்பாக நடத்தப்பட்டது.

இந்திய மத்திய அரசாங்கம் மற்றும் கருணாநிதி ஆகியோரைக் கண்டிக்கும் பதாதைகளைத் தாங்கிய வண்ணம் இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள்.

இந்திய அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான நீண்ட கால உறவைப் பாதிக்கும் என்று ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்தசிறி வர்ணசிங்க அங்கு எச்சரித்துள்ளார்.

ஆகவே விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களின் இப்படியான மாநாட்டை நடத்த இந்திய அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த மாநாட்டை தடை செய்யத் தவறியதன் மூலம் இந்திய அரசாங்கம் பாரிய சதி ஒன்றைச் செய்வதாக தேசிய பிக்கு முன்னணியின் பெங்கம்முவே நாலக்க தேரர் அங்கு குற்றஞ்சாட்டினார்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தமிழக முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி மற்றும் தமிழ் தேசியக் கூடமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் ஆகியோரின் உருவபொம்மைகள் அங்கு எரிக்கப்பட்டன.

TAGS: