புத்தரை முத்தமிட்ட மூவர் இலங்கையில் கைது

புத்தர் சிலையை இழிவுபடுத்தும் விதமான புகைப்படங்களை எடுத்ததன் மூலம் பௌத்தர்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாகக் குற்றம்சாட்டி பிரஞ்சு சுற்றுலாப் பயணிகள் மூன்று பேருக்கு இலங்கை நீதிமன்றம் ஒன்று நிறுத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனைகளை விதித்துள்ளது.

இந்த சுற்றுலாப் பயணிகள் தாங்கள் எடுத்த படங்களை ஒரு கடையில் அச்சிடக் கொடுக்கப்போனபோது அக்கடை உரிமையாளர் காவல்துறையில் முறையிட்டதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புத்த மதம் சம்பந்தப்பட்ட வணக்கத்துக்குரிய விஷயங்களை தவறாகக் கையாள்வதற்கு பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கையில் கடுமையான தடைகள் உண்டு.

புகைப்பட அச்சீட்டுக் கடை உரிமையாளர் கால்துறையில் தகவல் தந்ததை அடுத்து பிரான்சிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த பெண்கள் இருவரும் ஆண் ஒருவரும் தென்னிலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள பௌத்த விகாரை ஒன்றில் புத்தர் சிலைகளோடு இவர்கள் எடுத்த படங்களில் ஒன்றில் புத்தர் சிலைக்கு இவர்கள் முத்தம் கொடுப்பதுபோல அமைந்திருக்கும் படமும் இருந்தது.

செவ்வாயன்று இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்றும் இவர்களுக்கு கடூழியத்துடன் கூடிய ஆறுமாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றாலும் நீதவான் அத்தண்டனையை ஐந்து வருடங்களுக்கு நிறுத்தி வைத்துள்ளார் என்றும் காவல்துறை பேச்சாளர் கூறினார். நிறுத்திவைக்கப்பட்ட தண்டனை என்றால் இந்த ஆறு மாத காலத்தை அவர்கள் சிறையில் கழிக்கும் நிலை ஏற்படாது என்று சொல்லலாம்.

புனிதப் பொருட்கள் பாதுகாப்பு சட்டத்தில் எந்தப் பிரிவினரின் மத உணர்வையும் புண்படுத்தவோ இழிவுபடுத்தவோ கூடாது என்ற பிரிவின் அடிப்படையில் குற்றவியல் சட்டத்தின் கீழ் இவர்களுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பெரும்பான்மை மதமான பௌத்த மதத்தை இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மீது அரசாங்கம் கடுமையாக இருந்துவருகிறது என்று சொல்லாம்.

கடந்த மாதம் இலங்கைக்கு வந்திருந்த அரபிகள் ஐந்து பேர் புத்த மதத்தை இழிவுபடுத்தும் விதமான பிரசுரங்களை விநியோகித்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டிருந்தனர். 2010ஆம் ஆண்டில் புத்தர் உருவப்படம் அடங்கிய சாவிக்கொத்து வளையத்தை விற்ற காரணத்துக்காக இலங்கையின் முஸ்லிம் வியாபாரிகள் இரண்டு பேருக்கு நிறுத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனைகள் விதிக்கப்பட்டிருந்தது.

-BBC

TAGS: