பழனிவேலை அமைச்சராக்குவது இந்தியர் பிரச்னைக்குத் தீர்வாகாது

– Jeswan Kaur

உள்நாட்டிலும் உலக அளவிலும் பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்திய பெர்சே 2.0 பேரணி நடைபெற்று நேற்றுடன் ஒரு மாதம் முடிந்தது.

கூடவே, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஒரு தகுதியான தலைவர்தானா என்ற கேள்வியும் எழுகின்றது.

ஜூலை 9 பேரணி பல உண்மைகளை வெளிப்படுத்தியது. நஜிப்,அவற்றை எதிர்கொண்டிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் அந்த நாளை மக்கள் மறக்க வேண்டும் என்பதற்காக “சலுகைகள்”’ வழங்குவதில் அவர் விரைந்து ஈடுபட்டார்.

இந்தியர்கள் பக்கமாகப் பார்வையைத் திருப்பிய அவர், அவர்களின் இதயத்தைக் கவராவிட்டாலும் வாக்குகளையாவது பெற வேண்டும் என்று எண்ணியவராய் அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்து இந்திய அரசியல்வாதி ஒருவருக்கு இரண்டாவது அமைச்சர் பதவியைக் கொடுத்தால் நினைத்தது நடக்கும் என்று முடிவு செய்தார்.

அதன்படி, மஇகா ஆண்டுக்கூட்டத்தில், அதன் தலைவர் ஜி.பழனிவேல் பிரதமர்துறை அமைச்சில் ஒரு அமைச்சராக்கப்படுவார் என்று அறிவித்தார்.

பழனிவேல், முழு அமைச்சராகுமுன்னர், தோட்டத்தொழில், மூலப்பொருள் துணை அமைச்சராக இருந்தார்.  

ஆனால், நஜிப்பின் தந்திரம் அவருக்கு எதிராகவே வேலை செய்தது.அவரது செயலால் மக்கள் மனம் மகிழவில்லை. பழனிவேல், மக்களுக்கும் அவரது தொகுதிக்கும் உண்மையில் சேவையாற்றக்கூடியவர்தானா என்ற கேள்விதான் எழுந்தது.

2008 தேர்தலில், பழனிவேல்,62, அவரது தொகுதியான ஹுலு லங்காட்டில் 98 வாக்குகளில் தோற்றார். என்றென்றும் பிஎன் ஆதரவாளர்கள்தான் என்று கருதப்பட்ட இந்திய சமூகத்தினர் அந்தத் தேர்தலில் மாற்றரசுக் கட்சியை ஆதரித்தார்கள்.

அதன் விளைவாக, பழனிவேல் உள்பட மஇகா தலைவர்கள் தங்கள் தொகுதிகளில் தோற்றுப்போனார்கள்.

ஆனால், கடந்த ஆண்டு, ஹுலு லங்காட்டில் இடைத்தேர்தல் ஒன்று நடைபெற்றபோது அதில் ஒரு புதுமுகத்தை- பி.கமலநாதனை- களமிறக்கி மஇகா அந்த இடத்தைத் திரும்பவுக் கைப்பற்றியது.

2010, டிசம்பர் 6-இல், பழனிவேல் நீண்டகாலத் தலைவர் ச.சாமிவேலுவிடமிருந்து மஇகா தலைமைப் பொறுப்பை ஏற்றார். அதன்பின் அவர் ஒரு செனட்டர் ஆக்கப்பட்டு துணை அமைச்சராகவும் நியமனம் செய்யப்பட்டார். 

இப்போது அவர் முழு அமைச்சர். 35-ஆண்டுக் காத்திருப்புக்குப் பின்னர் மஇகா மீண்டும் இரண்டு முழு அமைச்சர்களைப் பெற்றுள்ளது.முன்பு அது இரண்டு முழு அமைச்சர்களைப் பெற்றிருந்தது. பின்னர் அது ஒரு முழு அமைச்சர், இரண்டு துணை அமைச்சர்கள் என்றானது.

தகுதி தேவையில்லை

இந்தியர்களின் பங்களிப்புக்கு ஓர் அங்கீகாரமாக பழனிவேல் முழு அமைச்சராக பதவி உயர்த்தப்படுவதாக நஜிப் கூறினார்.

அதாவது பழனிவேலைப் பிரதமர்துறை அமைச்சராக நியமனம் செய்த நஜிப், அவரது தகுதி பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.

எல்லாமே அரசியல்தான். பழனிவேல் ஹுலு லங்காட்டில் ஏற்கனவே மூன்று தடவை போட்டியிட்டு வென்றவர்தான். ஆனால், அங்கு கடந்த ஆண்டு இடைத்தேர்தல் வந்தபோது நஜிப் அவரை நிறுத்த விரும்பவில்லை.

இந்தியர்களின் வாக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். அதற்காக வெற்றிபெறக்கூடிய ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்து கமலநாதனைக் களம் இறக்கினார்.

ஒரு மஇகா தலைவர் கூறியதுபோல் “பழனிவேல், போட்டியிட்டு எப்பதவியும் பெற்றவரல்ல; இது அவருக்கு மட்டுமின்றி மஇகாவுக்கும் ஒரு பின்னடைவுதான். பழனிவேல் அப்பதவியில் இருக்கும்வரை அது அம்னோவுக்குக் கடன்பட்டிருக்கும்.”

அவர் அமைச்சராக்கப்பட்டதால் 1.8 மில்லியன் இந்தியர் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருப்பதாக தெரியவில்லை.

வாக்காளர்களைக் கொண்டு வந்தால் ஊக்குவிப்புச்சலுகைகள்

முழு அமைச்சராக்கப்பட்ட சில மணி நேரங்களில் பழனிவேல் ஓர் அறிவிப்புச் செய்தார். ஆயிரம் மஇகா உறுப்பினர்களை வாக்காளர்களாக பதிவு செய்யும் கிளைத் தலைவர்களுக்கு ஐ-பெட் சாதனங்கள், இந்தியாவில் கோயில் சுற்றுலா போன்ற ஊக்குவிப்புச் சலுகைகள் வழங்கப்படும் என்றார்.

“மஇகா உறுப்பினர்களில் சுமார் 200,000 பேர் இன்னும் வாக்காளர்களாகப் பதிவு செய்துகொள்ளாதிருக்கிறார்கள்…..களத்தில் இறங்கி அவர்களைப் பதிவு செய்ய வேண்டும். அப்படிச் செய்தோமானால், கட்சி 600,000 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்டிருக்கும்.

“அது நிகழ்ந்துவிட்டால்….மஇகா ஒரு வலுவான வாக்கு வங்கியாக விளங்கும். இந்தியர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் வலிமைவாய்ந்த கட்சியாக திகழ முடியும்.”

என்னதான் சொல்கிறார், பழனிவேல்? அவர் குறிப்பிடும் சலுகைகள், மஇகாவுக்கு இந்தியர்களின் ஆதரவைப் பெற்றுத் தந்து அதன்வழி பிஎன்னின் வெற்றி வாய்ப்பைப் பெருக்குவதற்குக் கொடுக்கப்படும் கையூட்டுப்போல் அல்லவா இருக்கின்றன. இது நடந்தால் பழனிவேலுக்கு அவரின் எஜமானர்களிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அவ்வளவுதான்.

இந்திய சமூகத்துக்கு என்ன கிடைக்கும்? அதன் தேவைகள் என்னவென்பதை அறியாத தலைவராக அல்லவா இருக்கிறார் அவர்.

ஆணவமிக்க தலைவர்கள் 

ஆணவம் நம் தலைவர்களுடன் கூடப் பிறந்தது. ஆளும் கூட்டணியில் வேறு எந்த இந்தியர் கட்சியையும் சேர்த்துக்கொள்ளப்பட்டால் மஇகா “வெளிநடப்புச் செய்யும்” என்று கூறியபோது பழனிவேல் தாமும்  அதற்கு விதிவிலக்கல்ல என்பதைக் காட்டிவிட்டார்.

“அவர்கள் இணை உறுப்பினராகலாம். நேரடி உறுப்பினராக முடியாது.

“அம்னோ வேறு எந்த மலாய்க் கட்சியும் பிஎன்னில் சேர இடமளிப்பதில்லை, மசீச-வும் சீனர் கட்சி எதுவும் சேர்வதற்கு இடம் கொடுப்பதில்லை. கெராக்கான் ஒரு பல்லினக் கட்சி.

“அம்னோ, மற்ற மலாய்க்காரர் கட்சிகளுக்கு பிஎன்னில் இடமளித்தால், நாங்களும் அதைப் பின்பற்றுவோம்”, என்றாவார்.

ஐயா, பழனிவேல், நீங்கள் இந்திய சமூகத்தின் சேவகர் அல்லவா? அப்படியிருக்க உங்களின் தேவைகளை முன்னிறுத்தாமல் அவர்களின் தேவைகளுக்கு அல்லவா நீங்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும்?

பிஎன்னுக்கு தங்கள் நலன்மீது  அக்கறை உண்டு என்று இந்தியர்களை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நஜிப், பழனிவேலை முழு அமைச்சராக்கினார் என்பதில் ஐயமே இல்லை.

பிஎன்னுக்கு உண்மையிலேயே இந்தியர்கள்மீது அக்கறை இருந்திருக்குமாயின், புக்கிட் ஜாலில் தோட்டத் தொழிலாளர்கள் மாநகராட்சியின் கைங்கரியத்தால் வீடிழந்து நின்றபோது அவர்களுக்கு உதவ விரைந்திருக்க வேண்டும்.

காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய கைதிகள் போலீசின் அத்துமீறிய செயலால் உயிரிழந்தார்களே, அப்போது பழனிவேல் போன்ற தலைவர்கள் எங்கே போனார்கள்? 

இண்டர்லோக் நாவல் பற்றிய சர்ச்சை தோன்றியபோது, தமக்கு எந்தப் பாதிப்பும் வராத முறையில் எச்சரிக்கையாக நடந்துகொண்டவர்தானே பழனிவேல்.

இந்திய சமூகத்தின் மேன்மைக்கு, அதன் சமூக-பொருளாதார நிலையை உயர்த்தவோ கெட்டிக்கார இந்திய பிள்ளைகளுக்கு மேல்படிப்புப் பயில உதவிச் சம்பளங்களைப் பெற்றுத்தரவோ அவர் உதவியதில்லை.

பழனிவேல் பிரதமர்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டது பிஎன்னுக்கு மட்டுமே உதவியாக இருக்கும்.

இந்திய சமூகத்தின் பங்களிப்புக்கு நஜிப் நன்றி நவின்றதெல்லாம் வெறும் பேச்சுத்தான்.

கடந்த பொதுத்தேர்தலில் இழந்த வாக்குகளை  திரும்பப் பெற வேண்டும். அதற்காக எல்லாவகை தந்திரங்களையும் கையாள்கிறார்கள்.

இனி, இந்திய சமூகம் அதற்கு என்ன தேவை என்பதை அதுதான் முடிவு செய்ய வேண்டும்.

அவர்கள், காலம்தோறும் சமூகத்தைத் தங்கள் சுயநலத்துக்குப்  பயன்படுத்திக்கொள்ளும் தலைவர்களை நாடிச் செல்லப் போகிறார்களா அல்லது இந்திய சமூகத்தின் நலனை மனத்தில் கொண்டுள்ள தலைவர்களைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்களா?

===========================================================================

Jeswan Kaur- நீண்டகாலமாக மைய நீரோட்ட ஊடகத்தில் செய்தியாளராகப் பணியாற்றியவர். இப்போது அதைவிட்டு விலகிவந்து ஆட்சியிலிருப்போரால் ஓரங்கட்டப்படும் விவகாரங்கள்மீது கவனம் செலுத்தி வருகிறார்.