தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல்

மட்டக்களப்பு: இலங்கையில் தேர்தல் பிரச்சாரத்திற்காகச் சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் கிழக்கு மாநில சட்ட மன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனையில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சிவநேசன் தலைமையிலான ஆதரவாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் வாக்கு சேகரித்தபோது பிள்ளையான் குழுவினர் என்று சந்தேகிக்கப்படும் குழுவினர் சோடா புட்டி கொண்டு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது.

இந்த தாக்குதலில் வாழைச்சேனை பேத்தாளையைச் சேர்ந்த இரண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக வாழைச்சேனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் சிவநேசன் கூறுகையில்;

“தேர்தல் தோல்வி பயம் காரணமாக ஜனநாயக ரீதியாக பிரச்சாரத்தில் ஈடுபடும் எங்களது ஆதரவாளர்கள் மீது பிள்ளையான் குழுவினர் இது போன்ற தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இது குறித்து வாழைச்சேனை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இந்த சம்பவத்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கும், தவரெட்ணம் குழுவினருக்கும் இடையே பெரும் மோதல் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

TAGS: