இலங்கையில் மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட கிழக்கு, வட மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மூன்று மாநிலங்களுக்குமான சட்டமன்றத் தேர்தல்களில் கிட்டத்தட்ட 50 விடுக்காடு வாக்குகளே பதிவாகியுள்ளன.
நேற்று நடைபெற்று முடிந்த தேர்தலின் முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இத் தேர்தல் முடிவுகளின்படி இலங்கை அதிபர் ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அதிகப்படியான இடங்களை கைப்பற்றி 3 மாநிலங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு : 14 இடங்கள் / 2 இலட்சத்து 44 வாக்குகள்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு : 11 இடங்கள் / 1 இலட்சத்து 93ஆயிரத்து 827 வாக்குகள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் : 7 இடங்கள் / 1 இலட்சத்து 32ஆயிரத்து 917 வாக்குகள்.
ஐக்கிய தேசிய கட்சி : 4 இடங்கள் / 74 ஆயிரத்து 901 வாக்குகள்.
கிழக்கு மாநிலத்தில் பதிவாகியுள்ள வாக்குகளின்படி மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த தமிழ் மக்கள் தங்களது வாக்குகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு பெரும்பான்மையாக செலுத்தி வெற்றியடைய செய்துள்ளனர்.
மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழர்களை பெரும்பான்மையான கொண்ட கிழக்கு மாநிலத்தில் ஆட்சியை அமைக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கிழக்கு மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்கு 19 இடங்கள் தேவைப்படுகின்ற நிலையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து கொள்ளவதற்கு 4 இடங்களை கைப்பற்றியுள்ள இலங்கையின் எதிர்க்கட்சியான ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி சம்மதம் தெரிவித்துள்ளது.
கிழக்கில் ஆட்சியமைப்பதற்கான தமது அடுத்தகட்ட நடவடிக்கையாக 7 இடங்களை கைப்பற்றியுள்ள சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
எனினும், கிழக்கு மாநிலத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவுடன் ஆளும்கட்சி ஆட்சியமைக்குமா அல்லது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐ.தே.கவின் ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்குமா என்பதை பொறுந்திருந்துதான் பார்க்கவேண்டும்.
தேர்தல்களில் 50 விழுக்காடு வாக்குகளே பதிவாகின!
கடந்த தேர்தல் காலங்களுடன் ஒப்பிடும்போது நீண்ட காலத்துக்குப் பின்னர் குறைந்தளவான வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
மூன்று மாநிலங்களிலும் பரவலாக நடந்துள்ள சில வன்முறைகளுக்கு மத்தியிலும் ஓரளவு சுமுகமாக வாக்குப்பதிவுகள் நடந்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
மக்கள் மத்தியில் தேர்தல் மற்றும் வாக்களிப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள அதிருப்தி போக்கும் அக்கறையின்மையும் வாக்குப்பதிவு வீதம் குறையக் காரணம் என்று கூறினாலும் பாரதூரமான அசம்பாவிதங்கள் நடக்கலாம் என்ற பீதி மக்கள் மத்தியில் நிலவியமையும் முக்கிய காரணம் என்று கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கிழக்கின் திருகோணமலையில் போரினால் இடம்பெயர்ந்துள்ள மக்களில் பலருக்கு அடையாள அட்டைப் பிரச்னை காரணமாக வாக்களிக்க முடியாமல்போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.